ஒரு விவசாயியாக நான் எனது பிறவிப்பயனை அடைந்துவிட்டேன்- எடப்பாடி பழனிசாமி
- உழைப்பது விவசாயிகள், ஆனால் அனுபவிப்பது வேறு ஒருவர்.
- விவசாயிகளின் கனவை நிறைவேற்ற மாநில அரசு நிதியில் இருந்தே திட்டத்தை நிறைவேற்ற உத்தரவிட்டேன்.
அத்திகடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக கோவை அன்னூர் அருகே முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் விவசாயிகள், அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
விழா மேடைக்கு எடப்பாடி பழனிசாமி மாட்டு வண்டியில் வருகை தந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிறகு மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
ஒரு விவசாயியாக தொடங்கி முதலமைச்சராக ஆவேன் என கனவிலும் நினைத்தது இல்லை. ஒரு விவசாயியாக நான் எனது பிறவிப்பயனை அடைந்து விட்டேன்.
அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு எதுவும் செய்யாமலேயே வந்து திறந்து வைப்பவர்களும் உள்ளனர். விவசாயிகளின் பங்களிப்போது அத்திக்கடவு அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டது. உழைப்பது விவசாயிகள், ஆனால் அனுபவிப்பது வேறு ஒருவர்.
விவசாயிகளின் கனவை நிறைவேற்ற மாநில அரசு நிதியில் இருந்தே திட்டத்தை நிறைவேற்ற உத்தரவிட்டேன். 3 மாவட்ட விவசாயிகளின் 60 ஆண்டு கால கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது.
என்னை யாரும் அடிமைப்படுத்த முடியாது. பணத்திற்கோ, புகழுக்கோ நான் மயங்கமாட்டேன்.
திறமையற்ற அரசு தான் தமிழகத்தில் தற்போது ஆட்சி செய்து வருகிறது. அதிமுக ஆட்சியில் அனைத்து ஏரிகளையும் நிரப்ப அவசியம் என இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
ஆட்சி மாற்றம் காரணமாக வெறும் 15 சதவீத பணிகளை முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.