சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி போராட்டம்- அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
- தெலுங்கானா மாநிலத்தில் 30 நாளில் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
- தமிழக முதலமைச்சருக்கு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதில் அக்கறை இல்லை என்பதே உண்மை.
சென்னை:
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான தேவைகள் குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை கலந்தாய்வு கூட்டம், சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, புதிய நீதிக் கட்சியின் பொதுச்செயலாளர் கோ.சமரசம், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, வழக்கறிஞர் சமூகநீதிப் பேரவையின் தலைவர் வழக்கறிஞர் பாலு, தமிழ்நாடு நாடார் சங்கத்தின் தலைவர் முத்து ரமேஷ், யாதவ மகாசபை சங்கத்தின் சார்பில் சேது மாதவன், தென்னிந்திய பார்வர்டு தலைவர் திருமாறன், கொங்கு மக்கள் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், தமிழர் தேசம் கட்சித் தலைவர் கே.கே.எஸ் செல்வக்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, மற்றும் பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் பிரச்சனையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகிறார். மாநில அரசுக்கு உரிமை இல்லை என்றும், மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என்றும் கூறி வருகிறார். ஆனால் இந்தியாவில் ஒடிசா, பீகார், தெலுங்கானா உள்பட பல மாநிலங்கள் நடத்தி முடித்துள்ளன. இத்தனை மாநிலங்கள் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் நடத்துவதில் என்ன பிரச்சனை. முதலமைச்சர் ஏன் தயங்குகிறார்?
தெலுங்கானா மாநிலத்தில் 30 நாளில் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக முதலமைச்சருக்கு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதில் அக்கறை இல்லை என்பதே உண்மை. எனவே தான் வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரிலாவது இதற்கான தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அதை வற்புறுத்தவே அனைத்து சமுதாயங்களின் தலைவர்களை உள்ளடக்கிய கூட்டத்தை இன்று நடத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை விரைந்து நடத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி சமூக நீதியில் அக்கறை கொண்ட அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளை ஒன்று திரட்டி சென்னையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும். போராட்டத்தை எந்த நாளில் நடத்துவது என்பது பற்றி மற்ற அமைப்புகளுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.