திருப்போரூர் கோவிலில் இன்று திருமணம்: டாக்டரை கரம்பிடித்த செங்கல்பட்டு கலெக்டர்
- கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
- திருமண விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
திருப்போரூர்:
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக அருண்ராஜ் உள்ளார். இவர் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சமுத்திரபாண்டியனின் மகன் ஆவார்.
இவருக்கும் அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமனின் நெருங்கிய உறவினரான மேகநாதன் - ஜெயந்தி தம்பதியரின் மகளான டாக்டர். கவுசிகாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து இன்று காலை திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவில் உற்சவ மண்டபத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ்-டாக்டர் கவுசிகா திருமணம் எளிய முறையில் நடைபெற்றது. திருமணத்தையொட்டி திருப்போரூர் முருகன் கோவில் உற்சவர் மண்டபத்தில் பூ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
திருமண விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் இரு வீட்டார் குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அரசுதுறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
கலெக்டர் அருண்ராஜ்-டாக்டர் கவுசிகா திருமண வரவேற்பு விழா வருகிற 14-ந்தேதி(வெள்ளிக்கிழமை) மாலை சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் மையத்தில் நடைபெற உள்ளது. திருமணத்தையொட்டி திருப்போரூர் முருகன் கோவிலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று முகூர்த்த நாள் என்பதால் கோவில் வளாகத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. இதனால் கோவில் வளாகம் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது.