தமிழ்நாடு

மதுரையில் களை கட்டும் ஜல்லிக்கட்டு திருவிழா: நாளை முதல் முன்பதிவு தொடக்கம்

Published On 2025-01-05 09:32 GMT   |   Update On 2025-01-05 09:32 GMT
  • ஆர்வத்துடன் ஜல்லிக்கட்டை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறோம்.
  • காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அலங்காநல்லூர்:

தமிழகத்தில் பாரம்பரியத்தை பறைசாற்றும் பல்வேறு நிகழ்வுகள் இருந்த போதிலும் தைத்திருநாளை முன்னிட்டு வீரம் மிகுந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற 14-ந்தேதி மதுரை அவனியாபுரம், 15-ந்தேதி பாலமேடு, 16-ந்தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

இதில் அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் திருச்சி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஜல்லிக்கட்டு காளைகள் இந்த போட்டிகளில் பங்கு பெறுவது வழக்கம்.

இதை யொட்டி ஜல்லிக்கட்டு விழா தொடங்குவதற்கு 2 மாதத்திற்கு முன் இருந்து ஜல்லிக்கட்டு காளைகளை அதன் உரிமையாளர்கள் தயார்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மண்குத்தும் பயிற்சி, நீச்சல் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகின்றனர். இதுகுறித்து காளை உரிமையாளர் அலங்காநல்லூர், கேட்டுக்கிடையைச் சேர்ந்த செல்வகுமார் (30) கூறியதாவது:-

கடந்த 5 வருடங்களாக ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்து வருகிறோம். காளைக்கு அன்பு என பெயர் சூட்டி அன்பாக வளர்த்து வருகிறேன்.


அலங்காநல்லூர், பாலமேடு, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு பங்குபெறும் வகையில் தயார்படுத்தி வருகிறோம்.

தங்க நாணயம், சைக்கிள், அண்டா, கட்டில், உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை பல ஜல்லிக்கட்டுகளில் களம் கண்டு பரிசாக பெற்றுள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இரண்டு முறை அவிழ்த்து விடப்பட்டு பிடிவிடாமல் பரிசு பெற்று பெருமை சேர்த்தது. இது வரை அவிழ்த்துவிட்ட வாடி வாசல்களில் எந்த போட்டியிலும் இதுவரை எனது காளை பிடிபட்டதே இல்லை.

வீட்டில் இருக்கும் போது குடும்பத்தில் ஒருவராக செல்லப்பிள்ளையாக திகழும், அதே நேரத்தில் ஜல்லிக்கட்டு வாடிவாசல் என்று வந்துவிட்டால் களத்தில் சீறிப்பாயும்.

இந்த உலகப் புகழ்பெற்ற பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளில் தங்களது காளைகளை அவிழ்த்து விடுவதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம். ஜல்லிக்கட்டு நடைபெறும் பொங்கலுக்கு நான்கு மாதத்திற்கு முன்பிருந்தே இந்த காளைகளுக்கு நீச்சல் பயிற்சி, மண் குத்தும் பயிற்சி, நடைபயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளித்து வருகிறோம்.

காளைகளுக்கு உணவாக தவிடு, உளுந்து, கடலை மிட்டாய், பருத்தி, உள்ளிட்ட சத்து மிகுந்த தானியப் பயிர்களை உணவாக வைக்கிறோம்.

மேலும் இந்த ஜல்லிக்கட்டு நடைபெறும் ஒரு மாதத்திற்கு முன்பிருந்து சுவாமிக்கு விரதமிருந்து ஜல்லிக்கட்டு காளைகளை தயார்படுத்து வோம். வழக்கத்தைப் போலவே இந்த ஆண்டும் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டில் பல்வேறு சிறப்பு மிக்க பரிசுகள் வழங்கப்படுவதாக விழா குழுவினர் தெரிவித்துள்ளனர். எனவே மிகுந்த ஆர்வத்துடன் ஜல்லிக்கட்டை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு திருவிழாவில் பங்கேற்பதற்கு நாளை முதல் முன்பதிவு தொடங்க இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News