ரூ.1000 கோடி அமுக்கிய தியாகி யார்? அ.தி.மு.க. சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு
- பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நள்ளிரவில் பரபரப்பான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.
- கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம், முக்கிய கடை வீதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
ஈரோடு:
சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறையினர் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது சோதனையில் ரூ.1000 கோடி வரை ஊழல் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஈரோடு மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நள்ளிரவில் பரபரப்பான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.
அந்தப் போஸ்டரில் ஆயிரம் ரூபாய் கொடுப்பதுபோல் கொடுத்து ஆயிரம் கோடி அமுக்கிய அந்த தியாகி யார்? பாட்டிலுக்கு 10 ரூபாய், விற்பனையில் ஆயிரம் கோடி ஊழல், உரிமம் பெறாத பார் மூலம் 40 ஆயிரம் கோடி ஊழல் போன்ற வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.
கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம், முக்கிய கடை வீதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதேபோல் பவானி, பெருந்துறை, கவுந்தப்பாடி, சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டு இருந்தது. இதனைப் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.