கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றது ஏன்? பரபரப்பு தகவல்கள்
- மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை இன்று சந்தித்து பேசுவதற்கு நேரம் கேட்டு உள்ளதாக தெரிகிறது.
- முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசிய பிறகு வருகிற புதன்கிழமை சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று திடீரென டெல்லி சென்றுள்ளார். அங்கு நடைபெறும் ஐ.பி. விழாவில் பங்கேற்கும் அவர் தொடர்ந்து 3 நாட்கள் டெல்லியில் இருப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
இன்று அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசுவதற்கு நேரம் கேட்டு உள்ளதாக தெரிகிறது.
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணை வேந்தர் பதவிகளை நிரப்ப தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள தேடுதல் குழுவில் யு.ஜி.சி.யின் நிர்வாகி இடம்பெற வேண்டும் என தமிழக அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தி இருந்தார்.
ஆனால் உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் கூறுகையில், யு.ஜி.சி.யின் நெறிமுறைகள் வழிகாட்டுதலே தவிர அவற்றை ஏற்று 4-வது நபரை நியமிப்பது அரசின் முடிவுக்கு உட்பட்டது என்று கூறி இருந்தார்.
இந்த பிரச்சனையில் முடிவு எட்டப்படாமல் உள்ளதால் இது குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி சட்ட நிபுணர்களிடம் கலந்தாலோசிக்க டெல்லியில் முகாமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அவர் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசிய பிறகு வருகிற புதன்கிழமை சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.