ஊட்டி அருகே கர்நாடக அரசு பூங்காவில் குளிர்கால மலர் கண்காட்சி
- 38 ஏக்கர் நிலப்பரப்பில் ரோஜா தோட்டம், இத்தாலிய தோட்டம், தேயிலைத் தோட்டம், பிரமைத் தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
- பசுமைக்குடிலில் 20 ஆயிரம் பூந்தொட்டிகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.
ஊட்டி:
சர்வதேச சுற்றுலாத் தலமான ஊட்டிக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
அதிலும் குறிப்பாக ஆண்டுதோறும் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருவதாக புள்ளி விவரங்கள் தெரிவித்து உள்ளன.
கர்நாடக அரசு தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான மலர்ப்பூங்கா, ஊட்டி அருகே உள்ள பர்ன்ஹில் பகுதியில் அமைந்து உள்ளது. இங்கு சுமார் 38 ஏக்கர் நிலப்பரப்பில் ரோஜா தோட்டம், இத்தாலிய தோட்டம், தேயிலைத் தோட்டம், பிரமைத் தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக, தமிழக தோட்டக்கலைத்துறை சார்பில் ஊட்டி பூங்காக்களில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.
அதேபோல கர்நாடக அரசு பூங்காவிலும் இந்தாண்டு முதல்முறையாக குளிர்கால மலர் கண்காட்சி நடத்துவதென திட்டமிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி கூறியதாவது:-
கர்நாடக அரசு பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஆர்கிட், சைக்ளோமன், ரெனன்குலஸ், டியூபெரஸ், பிகோனியா, கிரைசாந்திமம், மேரிகோல்டு உள்ளிட்ட 200 ரகங்களில், 5 லட்சம் மலர்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பசுமைக்குடிலில் 20 ஆயிரம் பூந்தொட்டிகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.
இதன் காரணமாக வார நாட்களில் 6 ஆயிரம் மற்றும் வார இறுதி நாட்களில் சுமார் 12 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வரை இந்த பூங்காவை பார்வையிட்டு செல்கின்றனர். மேலும் கர்நாடக அரசு பூங்காவில் அமைக்கப்பட்டு உள்ள தொங்குபாலம், மையப் பகுதியில் இருக்கும் மலர் நீர்வீழ்ச்சி ஆகியவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
இந்த பூங்காவை சுற்றிப் பார்க்க வரும் பயணிகளிடம் தலா ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் ஊட்டியின் பல இடங்களிலும் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இங்கு 'பார்க்கிங்' கட்டணம் கிடையாது.
இதற்கிடையே ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மேலும் கவருவதற்காக கர்நாடக அரசு பூங்காவில் இந்தாண்டு முதல்முறையாக குளிர்கால மலர் கண்காட்சி இம்மாதம் 3-வது வாரத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வேண்டுமென கர்நாடகா, தமிழக முதலமைச்சர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.