கோவில் சுற்றுச்சுவர் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது- நண்பருக்கு வலைவீச்சு
- ஒரு மதுபாட்டில் எரிந்த நிலையிலும், மற்றொரு பெட்ரோல் குண்டு எரியாத நிலையிலும் கிடந்தது.
- இரவோடு இரவாக சண்முகராஜாவை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
நெல்லை:
நெல்லை டவுன் மாதா பூங்கொடி தெருவில் சுடலை கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே நேற்று இரவு மர்ம நபர்கள் 2 பேர் வந்துள்ளனர்.
அவர்கள் 2 பேரும் மதுபோதையில் இருந்த நிலையில், அதில் ஒருவர் திடீரென தனது கையில் வைத்திருந்த மதுபாட்டிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கோவில் காம்பவுண்டு சுவர் மீது வீசினர். இதனால் பயங்கரமான சத்தம் கேட்டது.
உடனே அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியே வேகமாக வந்து பார்த்தனர். அப்போது மர்ம நபர்கள் 2 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். உடனே அப்பகுதி மக்கள் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர்கள் அன்னலெட்சுமி, கோபால கிருஷ்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
தகவல் அறிந்து மாநகர துணை போலீஸ் கமிஷனர் கீதாவும் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் கோவில் காம்பவுண்டு சுவரில் தீப்பிழம்பு ஏற்பட்டு கரி பிடித்திருந்தது. மேலும் அங்கு ஒரு மதுபாட்டில் எரிந்த நிலையிலும், மற்றொரு பெட்ரோல் குண்டு எரியாத நிலையிலும் கிடந்தது.
உடனே போலீசார் அவற்றை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். அப்பகுதி மக்களிடம் நடத்திய விசாரணையில் 2 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு ஓடியது தெரியவந்தது. இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சம்பவம் நடந்த தெருவில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது பெட்ரோல் குண்டு வீசியது டவுன் மாதா பூங்கொடி தெருவை சேர்ந்த ராமையா என்பவரது மகன் சண்முகராஜா(வயது 25) என்பது தெரியவந்தது.
இதையடுத்து இரவோடு இரவாக சண்முகராஜாவை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் விசாரித்ததில் சண்முகராஜாவுடன் வந்த வாலிபர், டவுன் முகமது அலி தெருவை சேர்ந்த நிகாஷ்(24) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவர்.
சமீபத்தில் டவுன் பழனி தெருவில் மதுபோதையில் இருந்த வாலிபர்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அந்த தெருவும், அந்த தெரு வாலிபர்களும் பெரிய அளவில் பெயர் வாங்கி விட்டனர். அதேபோல் எங்கள் தெருவிலும் நாங்கள் பெரிய ஆளாக பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக மதுபோதையில் மது பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி தீப்பற்றவைத்து வீசினோம் என்று சண்முகராஜா கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
எனினும் பெட்ரோல் குண்டு வீச குறிப்பாக அந்த இடத்தை தேர்வு செய்தது எதற்காக என்று போலீசார் விசாரித்தனர். அந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் வசிக்கும் வாலிபர்களிடமும் விசாரித்தனர். அப்போது அதில் செல்போன் கடையில் வேலை பார்க்கும் மாதா பூங்கொடி தெருவை சேர்ந்த ஹரிஷ் என்ற வாலிபர், கடந்த ஓராண்டுக்கு முன்பு 'ப்ரி பயர்' விளையாட்டு விளையாடியதில் தனக்கும், சண்முகராஜாவுக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. நாங்கள் நண்பராக இருந்தாலும் இந்த பிரச்சனையில் அவர் என்னை சக நண்பர்களுடன் சேர்ந்த தாக்கினார். இதனால் நான் அவர்களிடம் பேசாமல் இருந்து வருகிறேன் என்று தெரிவித்தார்.
இதனால் 'ப்ரீ பயர்' விளையாட்டில் ஏற்பட்ட முன்விரோதத்தில் அவர்கள் மதுபோதையில் இவ்வாறு பெட்ரோல் குண்டு வீசினார்களா? அல்லது ஹீரோயிசம் செய்வதற்காக இந்த சம்பவத்தை நிகழ்த்தினார்களா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான நிகாசை தேடி வருகின்றனர்.
கைதான சண்முகராஜா மார்க்கெட்டில் லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். அவர் மீது கஞ்சா வழக்கு, திருட்டு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். சமீப காலமாக நெல்லை மாநகர பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் சாதாரணமாகிவிட்டதாகவும், போலீசார் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர்.