செய்திகள்

இந்தியாவிற்கு அச்சுறுத்தல் வெளியில் இருந்து அல்ல, உள்நாட்டில் தான்: சிவசங்கர் மேனன் கருத்து

Published On 2016-10-13 05:47 GMT   |   Update On 2016-10-13 05:47 GMT
இந்தியாவிற்கு அச்சுறுத்தல் வெளியில் இருந்து அல்ல, உள்நாட்டில் தான் உள்ளது என்று முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான சிவசங்கர் மேனன் எழுதிய இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான புத்தகம் அடுத்த வாரம் சர்வதேச அளவில் வெளியிடப்பட உள்ளது.

இதனிடையே அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய மேனன் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் வெளியில் இருந்து அல்ல, உள்ளுக்குள்ளே தான் உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் மேனன் தெரிவித்துள்ளதாவது:-

பாகிஸ்தான் அல்லது சீனாவில் இருந்து இந்தியாவிற்கு அச்சுறுத்தல் வருகிறதா என்று கேட்டால் ’இல்லை’ என்று தான் சொல்வேன்.

தேசிய பாதுகாப்பை பொறுத்த வரை உண்மையில் அச்சுறுத்தல் உள்நாட்டில் தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

தற்போது இந்தியாவிற்கு வெளியில் இருந்து அச்சுறுத்தல் எதுவும் இல்லை. 1950-களில் நாம் அரசமைத்தது முதல் 1960 வரை உள்நாட்டு பிரிவினைவாதிகளின் அச்சுறுத்தல் தான் இருந்தது. வேறு எந்த அச்சுறுத்தலும் இல்லை.

உண்மையில் நாம் அதனை தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்று நினைக்கிறேன்.

இந்தியாவில் நிலவி வந்த வன்முறைகளில் பயங்கரவாதம், அதிதீவிர இடதுசாரி பயங்கரவாதம் உள்ளிட்டவற்றால் ஏற்படும் வன்முறை சம்பவங்கள் அதிக அளவில் குறைந்துள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு முதல் வகுப்புவாத, சமூக வன்முறைகள் தான் அதிகரித்துள்ளது. இதனை தான் நாம் கண்டறிந்து எதிர்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் 2010-ம் ஆண்டு முதல் 2014 வரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சிவசங்கர் மேனன் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News