செய்திகள்

‘நியர் ஸ்பேஸ்’ பகுதியில் சீனா, ஆளில்லா உளவு விமானங்களை சோதித்து அதிரடி

Published On 2017-11-01 05:28 IST   |   Update On 2017-11-01 05:28:00 IST
‘நியர் ஸ்பேஸ்’ பகுதியில் ஆளில்லா உளவு விமானங்களை ஏவி சோதித்து சீனா அதிரடி சோதனை நடத்தி உள்ளது.
பீஜிங்:

‘நியர் ஸ்பேஸ்’ பகுதியில் ஆளில்லா உளவு விமானங்களை ஏவி சோதித்து சீனா அதிரடி சோதனை நடத்தி உள்ளது.

சீனா தனது படை பலத்தை பெருக்கவும், நவீனமயம் ஆக்கவும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த நாட்டின் பட்ஜெட்டில் ராணுவத்துக்கு மிக அதிக தொகை ஒதுக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சீனாவின் அதிபராக தொடர்ந்து 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜின்பிங், ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் “போர்களில் எப்படி வெற்றி பெறுவது என்பதில் கவனம் செலுத்துவதன் மூலம் போருக்கான ஆயத்த நிலையை தீவிரப்படுத்துங்கள். சீர்திருத்தங்களை, புதுமைகளை முன்னெடுத்து செல்லுங்கள். போருக்கான ஆயத்த பயிற்சியை தீவிரம் ஆக்குங்கள். நமது ராணுவத்தை நவீனமயமாக்க வேண்டும். 21-ம் நூற்றாண்டின் மத்தியில் உலகின் தரம்வாய்ந்த ராணுவமாக சீன ராணுவம் உருவாக வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

இது மட்டுமின்றி கடற்பகுதிகளில் சீனா ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளது. இது இந்தியாவுக்கு சவாலாக அமைந்துள்ளது. இந்த சவாலை முறியடிக்கும் நடவடிக்கையில் இந்தியாவும் களம் இறங்கி உள்ளது.

அந்த வகையில் சீனாவை கண்காணிக்க ஏதுவாக அமெரிக்காவிடம் இருந்து ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான 22 ஆளில்லா உளவு விமானங்களை வாங்க உள்ளது. இதற்கான ஒப்புதலை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வழங்கி உள்ளார். இந்த விமானங்கள் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 50 ஆயிரம் அடி உயரம் செல்லக்கூடியவை, ‘ரிமோட் கண்ட்ரோல்’ முறையில் இயக்கத் தகுந்தவை, சீனாவின் நீர்மூழ்கிக்கப்பலின் நடமாட்டத்தைக் கூட கண்காணிக்க முடியும்.

இந்த நிலையில் சீனா அதிரடியாக ஆளில்லா உளவு விமானங்களை ஏவி சோதித்துள்ளது.

இந்த உளவு விமானங்கள் செங்குத்தான ‘பேட்’ அளவிலானவை. ராணுவ உளவு பணிகளுக்கானவை. ‘நியர் ஸ்பேஸ்’ என்று அழைக்கப் படுகிற விண்வெளியில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

‘நியர் ஸ்பேஸ்’ என்பது பூமியின் காற்று மண்டலம் அருகே, கடல் மட்டத்தில் இருந்து 20 கி.மீ., முதல் 100 கி.மீ., (65 ஆயிரம் அடி முதல் 3 லட்சத்து 28 ஆயிரம் அடி) உயரம் கொண்ட விண்வெளி ஆகும்.

இந்த பகுதி ஆளில்லா விமானங்களுக்கு ‘டெத் ஸோன்’, அதாவது மரண மண்டலம் என கருதப்பட்டு வந்தது. இந்தப் பகுதியில் ஆளில்லா விமானங்களை இயக்க முடியாது. இதற்கு காரணம், மெல்லிய காற்றும், மிகக்குறைந்த வெப்ப நிலையும்தான். இதனால் பேட்டரி போன்றவை செயலிழந்து போவதற்கான வாய்ப்பு அதிகம்.

ஆனால் இந்த இடர்ப்பாடுகளை எல்லாம் தவிர்க்கிற வகையில், சீனா உள்நாட்டிலேயே ஆளில்லா விமானங் களை தயாரித்துள்ளது. அந்த விமானங்கள்தான் இப்போது ஏவி சோதிக்கப்பட்டுள்ளன.

சீனாவின் அபிலாசைப்படி தனது ராணுவ உளவு நோக்கங்களை அடைகிற வகையில் இந்த ஆளில்லா விமான சோதனை ஒரு படி முன்னேறிய நடவடிக்கை என்று ஹாங்காங்கில் இருந்து வருகிற ‘சவுத் சீனா மார்னிங் போஸ்ட்’ ஏடு கூறுகிறது.

இதே போன்ற சோதனைகளை அமெரிக்க கடற்படையும், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘நாசா’வும் சமீப ஆண்டுகளில் நடத்தி உள்ளன.

கடந்த மாதம் கூட சீனா 25 கி.மீ. உயரத்தில் சோதனை ரீதியில் ஒரு ஆளில்லா விமானத்தை ஏவி சோதித்தது நினைவுகூரத்தக்கது. 

Similar News