செய்திகள்

தாய்லாந்து குகைக்குள் சிக்கி தவித்த 13 பேரில் 6 மாணவர்கள் மீட்பு

Published On 2018-07-08 18:17 IST   |   Update On 2018-07-08 19:18:00 IST
தாய்லாந்து நாட்டில் வெள்ளம் சூழ்ந்த குகைக்குள் சிக்கி தவித்த 13 பேரில் 6 மாணவர்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாமுக்கு திரும்பியுள்ளனர். #Thaicaverescue #FourboysinThaicaverescue
பாங்காக்:

தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து கடற்படை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. குகைக்குள் உள்ள சிறுவர்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

திடீரென பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் வெள்ளமும், சகதியும் புகுந்தது. இதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் சிக்கியிருக்கும் அவர்களை மீட்பதற்கு  கடும் சவால்களை சந்தித்து வருகின்றனர்.

முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மீட்புக்குழு வீரர் ஒருவர் உயிரிழந்தார்.


இதனால் மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டது.  அதேசமயம் அந்தப் பகுதியில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே,  குகைக்குள் சிக்கியுள்ள 13 பேரையும் கூடிய விரைவில் மீட்க வேண்டிய நெருக்கடி அதிகரித்துள்ளது.

இந்நிலையில்,  வெள்ளம் சூழ்ந்த குகைக்குள் சிக்கி தவித்த 13 பேரில் 4 மாணவர்கள் மீட்கப்பட்டு, மீட்பு குழுவினரின் நிவாரண முகாமுக்கு திரும்பியுள்ளதாக இன்று மாலை முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

அதன்பின்னர், சுமார் ஒரு மணி நேரம் கழித்து மேலும் இரு மாணவர்கள் குகையில் இருந்து வெளியே வந்தனர். அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் அவசரமாக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படும் காட்சிகளை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

இவர்களை தொடர்ந்து குகைக்குள் உள்ள மேலும் 7 பேரும் விரைவில் வெளியே வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #Thaicaverescue #FourboysinThaicaverescue
Tags:    

Similar News