உலகம்
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

நான் ஒளிந்து கொள்ளவில்லை, தலைநகரில் தான் இருக்கிறேன் - உக்ரைன் அதிபர் தகவல்

Published On 2022-03-08 15:43 IST   |   Update On 2022-03-08 15:43:00 IST
ரஷியாவிற்கு எதிரான போரில் வெற்றி பெற தம்மால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கீவ்:

உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் ராணுவத் தாக்குதல்  13 நாளாக நீடித்து வருகிறது. அந்நாட்டின் பல நகரங்களில் ரஷிய படைகள் தாக்குதலை தீவிரப்படுததி உள்ளன. வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இருந்து தலைநகர் கீவ்வை நோக்கி ரஷிய படைகள் நெருங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எங்கு இருக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில்,  தமது  இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் பேசிய அவர்,  தாம் தலைநகர் கீவ்வில் தான் இருப்பதாகவும், எங்கும் ஒளிந்து கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.  

பாங்கோவா தெருவில்தான் தாம் வசிப்பதாகவும் தாம் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்றும் என்றும் அந்த வீடியோ பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். தமது நாட்டை காக்கும் போரில் வெற்றி பெற முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

ரஷிய படைகள் தாக்குதல் தொடங்கிய பின்னர் இதுவரை, மூன்று முறை ஜெலன்ஸ்கியை படுகொலை செய்யும் முயற்சிகள் நடைபெற்றதாகவும், அதில் இருந்து அவர் தப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உக்ரைன் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அந்த சதி முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. இந்நிலையில் தமது இருப்பிடம் குறித்து  ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Similar News