உலகம்
கோழிகள்

சீனாவில் ‘எச்3 என்8’ பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவியது

Published On 2022-04-27 10:22 IST   |   Update On 2022-04-27 10:22:00 IST
சீனாவில் காய்ச்சல் உள்ளிட்ட பல அறிகுறிகள் காணப்பட்ட 4 வயது சிறுவனுக்கு பறவை காய்ச்சல் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
பீஜிங்:

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் முதல் முறையாக பறவை காய்ச்சல் மனிதருக்கு பரவி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பறவை காய்ச்சலின் ‘எச்3 என்8’ திரிபு முதல் மனித நோய்த்தொற்றை பதிவு செய்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார  ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காய்ச்சல் உள்ளிட்ட பல அறிகுறிகள் காணப்பட்ட 4 வயது சிறுவனுக்கு பறவை காய்ச்சல் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. வீட்டில் வளர்க்கப்படும் கோழிகள் மற்றும் காகங்கள் மூலம் பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவி இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

சிறுவனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த யாருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை.

இது தொடர்பாக சுகாதார ஆணையம் கூறும்போது, ‘எச்3 என்8’ வைரஸ் மாறுபாடு பறவைகள், குதிரைகள், நாய்கள் ஆகியவற்றில் கண்டறியப்பட்டது.  ஆனால் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவியதாக எதுவும் பதிவாகவில்லை. ஆரம்ப ஆய்வுகளின்படி இந்த மாறுபாடு இன்னும் மனிதர்களை திரும்ப பாதிக்கும் திறனை கொண்டிருக்கவில்லை. பெரிய அளவிலான தொற்று நோய்க்கான ஆபத்து குறைவாக உள்ளது-. எச்3 என்8 பறவை காய்ச்சல் வைரஸ் மக்களிடையே பரவுதற்கான ஆபத்து குறைவாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவி உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News