உலகம்

அமெரிக்காவில் தன்னலக்குழு அதிகாரம் பெற்று உருவாகிறது - ஜோ பைடன் எச்சரிக்கை

Published On 2025-01-16 07:51 IST   |   Update On 2025-01-16 07:51:00 IST
  • ஆபத்தான அதிகாரக் குவிப்பு" குறித்து அமெரிக்கர்களை எச்சரித்தார்.
  • ஆபத்தில் இருப்பதை உணர்ந்து தான், அதிபர் தேர்தலில் போட்டியிட்டேன்.

அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து இன்னும் சில நாட்களில் விலக இருக்கும் ஜோ பைடன், புதன்கிழமை ஓவல் அலுவலகத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு தனது பிரியாவிடை உரையை நிகழ்த்தினார். உரையின் போது, அமெரிக்காவில் உள்ள ஒரு சில செல்வந்தர்களிடையே "ஆபத்தான அதிகாரக் குவிப்பு" குறித்து அமெரிக்கர்களை எச்சரித்தார்.

ஓவல் அலுவலகத்தில் இருந்து பேசிய ஜோ பைடன், "இன்று, அமெரிக்காவில் ஒரு தன்னலக்குழு தீவிர செல்வம், அதிகாரம் மற்றும் செல்வாக்குடன் உருவாகி வருகிறது. இது நமது ஜனநாயகத்தையும், நமது அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்தையும், அனைவரும் முன்னேறுவதற்கான நியாயமான வாய்ப்பையும் உண்மையில் அச்சுறுத்துகிறது."

"அமெரிக்கர்கள் தவறான தகவல்களின் கீழ் புதைக்கப்படுகிறார்கள், இது அதிகார துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கிறது. பத்திரிகை சுதந்திரம் நொறுங்கி வருகிறது. செய்தி ஆசிரியர்கள் மறைந்து வருகின்றனர். அதிகாரம் மற்றும் லாபத்திற்காகச் சொல்லப்படும் பொய்களால் உண்மை அடக்கப்படுகிறது. நமது குழந்தைகள், நம் குடும்பங்கள் மற்றும் ஜனநாயகத்தை துஷ்பிரயோக சக்தியிலிருந்து பாதுகாக்க சமூக தளங்களை நாம் பொறுப்பேற்க வேண்டும்."

"நாம் ஒன்றிணைந்து மேற்கொண்ட பணிகளின் தாக்கத்தை உணர சற்று நேரம் ஆகும். ஆனால், நாம் விதைத்த விதைகள் வளர்ந்து, வரும் தசாப்தங்களில் பூத்துக் குலுங்கும். அமெரிக்க ஆபத்தில் இருப்பதை உணர்ந்து தான், நான் அதிபர் தேர்தலில் போட்டியிட்டேன்."

"திக்கி பேசும் குழந்தை ஒன்று ஸ்கிராண்டன், பென்சில்வேனியா அல்லது கிளேமாண்ட், டெலாவேரில் சாதாரண துவக்கத்தில் இருந்து அமெரிக்க அதிபராக ஓவல் அலுவலகத்தின் ரெசல்யூட் மேசையின் பின் அமர்வது உலகில் வேறு எங்கும் சாத்தியமாக முடியாது. நான் நம் நாட்டின் மீது முழு அன்பை முழுமையாக அர்ப்பனித்துள்ளேன். அதற்கு கைமாறாக அமெரிக்க மக்களிடம் இருந்து பல லட்சம் முறை அன்பு, ஆதரவு கலந்த ஆசீர்வாதத்தை பெற்றுள்ளேன்," என்றார்.

பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அதிபர் ஜோ பைடன் வருகிற 20 ஆம் தேதி வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுகிறார். இதே நாளில் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்பம் பதவியேற்கிறார். 

Tags:    

Similar News