இங்கிலாந்து ஆஸ்பத்திரியில் இந்திய வம்சாவளி நர்சை கத்தியால் குத்திய நோயாளி
- அச்சம்மா செரியன், அவசர பிரிவில் பணியில் இருந்தபோது அவரை நோயாளி ஒருவர் கத்தரிக்கோலால் கழுத்தில் திடீரென்று குத்தினார்.
- அச்சம்மா செரியனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மான்செஸ்டர்:
இந்தியாவை சேர்ந்தவர் அச்சம்மா செரியன்(வயது 57). இவர் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள ஓல்ட்ஹாம் ராயல் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் அச்சம்மா செரியன், அவசர பிரிவில் பணியில் இருந்தபோது அவரை நோயாளி ஒருவர் கத்தரிக்கோலால் கழுத்தில் திடீரென்று குத்தினார். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற ஊழியர்கள், அவரை மீட்டு அவசர பிரிவில் சேர்த்தனர். மேலும் தாக்குதல் நடத்திய நபரை மடக்கி பிடித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நர்சை கத்தியால் குத்திய ரோமன் ஹக்கை (வயது 37) கைது செய்து மான்செஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அவர் மீது கொலை முயற்சி மற்றும் கத்தியால் குத்தப்பட்ட பொருளை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரை காத்திருக்க வைத்ததால் கோபம் அடைந்து நர்சு மீது தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.
இதற்கிடையே அச்சம்மா செரியனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலைமை கவலையிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சம்மா செரியன் இங்கிலாந்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் ல்ட்ஹாம் ராயல் ஆஸ்பத்திரியில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.