உலகம்

அவசர நிலையை அறிவித்த விவகாரம்: பதவி நீக்கம் செய்யப்பட்ட தென்கொரியா அதிபர் கைது

Published On 2025-01-15 14:48 IST   |   Update On 2025-01-15 14:48:00 IST
  • கிளர்ச்சி குற்றச்சாட்டுகளுக்காக யூன் சுக் இயோலுக்கு தென் கொரிய கோர்ட்டு கைது வாரன்ட் பிறப்பித்து இருந்தது.
  • தற்போதைய வாரண்டின் கீழ் அவர் 48 மணி நேரம் வரை தடுத்து வைக்கப்படலாம்.

சியோல்:

தென்கொரியாவில் கடந்த 3-ந்தேதி அதிபர் யூன் சுக் இயோல் திடீரென ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதற்கு பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சில மணி நேரங்களில் அவசர நிலையை திரும்ப பெற்றார். ஆனால் அதிபர் பதவியில் இருந்து யூன் சுக் இயோல் விலக கோரி போராட்டம் வெடித்தது. இதையடுத்து பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதிபர் பதவியில் இருந்து யூன் சுக் இயோல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கிடையே கிளர்ச்சி குற்றச்சாட்டுகளுக்காக யூன் சுக் இயோலுக்கு தென் கொரிய கோர்ட்டு கைது வாரன்ட் பிறப்பித்து இருந்தது. இதையடுத்து கடந்த 3-ந்தேதி அவரை கைது செய்ய புலனாய்வு அதிகாரிகள் சென்றனர். அப்போது யூன் சுக் இயோலின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தியதால் கைது செய்ய முடியவில்லை.

இந்நிலையில் இன்று அதிகாலை சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் யூன் சுக் இயோல் வீட்டிற்கு சென்றனர். இதனை அறிந்த அவரது ஆதரவாளர்கள் வீட்டிற்கு முன் திரண்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம்-மோதல் ஏற்பட்டது. யூன் சுக் இயோலை கைது செய்யும் முயற்சியை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து இயோலின் வக்கீல்கள், புலனாய்வு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே விசாரணைக்கு ஒத்துழைப்பதாக யூன் சுக் இயோல் தெரிவித்தார். அதன்பின் நீண்ட நேரத்திற்கு பிறகு, அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்படுவதற்கு முன்பு யூன் சுக் இயோல் வெளியிட்ட வீடியோவில் கூறும்போது, விசாரணையின் சட்டப்பூர்வத்தன்மையை ஏற்கவில்லை. ஆனால் ரத்தக்களரியைத் தடுக்க விசாரணைக்கு இணங்குகிறேன். சட்டத்தின் ஆட்சி முற்றிலும் சரிந்து விட்டது என்றார்.

தற்போதைய வாரண்டின் கீழ் அவர் 48 மணி நேரம் வரை தடுத்து வைக்கப்படலாம். அவரது காவலை நீட்டிக்க அதிகாரிகள் புதிய வாரண்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News