50 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு எண்ணிக்கை.. மரணக் குழியாக மாறிய காசா - மீண்டும் தீவிரமடையும் போர்
- கடந்த 24 மணிநேரத்தில் பதிவான 41 உயிரிழப்புகளையும் சேர்த்து தற்போது மொத்த பலி எண்ணிக்கை 50,021 ஆக உள்ளது.
- பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற ஐநாவின் அறிக்கை மேற்கொள் காட்டுகிறது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முடிவுக்கு வந்ததை அடுத்து மீண்டும் போர் தொடங்கியுள்ளது.
கடந்த 5 நாட்களில் காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், லெபனானில் மீதும் இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்ததாக காசா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் பதிவான 41 உயிரிழப்புகளையும் சேர்த்து தற்போது மொத்த பலி எண்ணிக்கை 50,021 ஆக உள்ளது. மேலும் அதன் அறிக்கையில் இதுவரை 113,000 க்கும் மேற்பட்டோர் போரில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் எத்தனை பேர் ஹமாஸ் அமைப்பினர், எத்தனை பேர் பொதுமக்கள் என அமைச்சகம் தெளிவுபடுத்தவில்லை. ஆனால் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற ஐநாவின் அறிக்கை மேற்கொள் காட்டுகிறது.
காசா மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏமனின் ஹவுதிகள் தொடர்ந்து இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளைத் ஏவி தாக்கி வருகின்றனர்.
இதில் ஈரானின் தொடர்பு இருப்பதாக இஸ்ரேல் சந்தேகிக்கிறது. இதன் காரணமாக, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில், தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாவினர் ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகள் ஏவி வருகின்றனர்.
ஹமாஸ் அமைப்பும் ஏவுகணை தாக்குதலைகளை தொடங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து காசா மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட போர் நிறுத்தத்தின்படி பணய கைதிகள் பரிமாற்றம் நடந்தது. ஆனால் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதால் காசாவில் நிலவிய தற்காலிக அமைதி தற்போது வெடிகுண்டுகளால் மீண்டும் முற்றாக சீர்குலைந்து வருகிறது.
கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தியதில் இருந்து இஸ்ரேல், காசா, ராஃபா உள்ளிட்ட நகரங்கள் மீது இடைவிடாது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் பக்கம் 1200 பேர் வரை உயிரிழந்தனர். அதற்கு விலையாக காசாவில் தற்போது 50,021 உயிர்களை இஸ்ரேல் குடித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்திடம் அனுமதி பெற்றே தற்போதைய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.