நிவாரண பொருள் எடுத்துச்சென்ற வாகனங்கள் மீது தாக்குதல்: பாகிஸ்தானில் 5 பேர் பலி
- பாகிஸ்தானில் நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
- இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பினரும் பொறுப்பு ஏற்கவில்லை.
லாகூர்:
பாகிஸ்தானின் கைபர்பக்துவா மாகாணத்தில் உள்ள குர்ராம் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் பழங்குடியின குழுக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது.
நிலப்பிரச்சனை தொடர்பாக ஷியா மற்றும் சன்னி பிரிவைச் சேர்ந்த பழங்குடியினர்கள் இடையே அந்த மாவட்டத்தில் நடந்து வரும் மோதலில் இதுவரை 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையைக் கட்டுப்படுத்த அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட குர்ராம் மாவட்டத்திற்கு வாகனங்களில் உணவு, மருந்து உள்பட பல்வேறு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.
அப்போது அங்கு வந்த கிளர்ச்சியாளர்கள் அந்த வாகனங்களைக் குறிவைத்து துப்பாக்கிச்சூடு, ராக்கெட் தாக்குதல் நடத்தினர்.
இந்த திடீர் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 2 பேர், லாரி டிரைவர் 3 பேர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய கும்பல் 5 டிரைவர்களை கடத்திச்சென்றனர். நிவாரண பொருட்களை கொண்டு சென்ற வாகனங்களையும் தீ வைத்து எரித்தனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பினரும் பொறுப்பு ஏற்கவில்லை. இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.