உலகம்

குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியில் சீனா, ஜப்பானுடன் இணைந்த ரஷியா

Published On 2025-01-09 12:31 IST   |   Update On 2025-01-09 12:31:00 IST
  • இறந்து பிறக்கும் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை விட 16,000 குறைவாகவும் உள்ளது.

குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியில் சீனா மற்றும் ஜப்பானுடன் ரஷியா இணைந்துள்ளது. மக்கள் தொகை வளர்ச்சியை அதிகரிக்க சில திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இளம்பெண்கள் குடும்பங்களைத் தொடங்க ஊக்குவிக்கும் முயற்சியில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கும் 25 வயதுக்குட்பட்ட பெண் மாணவர்களுக்கு 100,000 ரூபிள் (இந்திய மதிப்பில் ரூ.81,000) கணிசமான ஊக்கத்தொகையை ரஷிய அரசு வழங்குகிறது.

இந்த திட்டத்திற்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் உள்ளூர் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் முழுநேர மாணவர்களாகவும், 25 வயதுக்குட்பட்டவர்களாகவும், கரேலியாவில் வசிப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

இறந்து பிறக்கும் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு இந்த ஊக்கத்தொகை கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், திடீரென நோய் பாதிப்பு காரணமாக குழந்தை இறந்துவிட்டால் ஊக்கத்தொகை ரத்து செய்யப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மேலும், ஊனமுற்ற குழந்தைகளைப் பெற்றெடுக்கும் இளம் தாய்மார்கள் இந்த திட்டத்திற்கு தகுதியுடையவர்களா என்பதை குறிப்பிடவில்லை, மேலும் குழந்தை பராமரிப்பு மற்றும் பிரசவத்திற்குப் பிறகான செலவுகளுக்கு உதவ கூடுதல் தொகையை பெறுவார்களா என்பதையும் குறிப்பிடவில்லை.

இதனிடையே, ரஷியாவின் வரலாற்றில் பிறப்பு விகிதம் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 5,99,600 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. இது 25 ஆண்டுகளில் மிகக் குறைந்த பிறப்பு எண்ணிக்கையையும், 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை விட 16,000 குறைவாகவும் உள்ளது. 

Tags:    

Similar News