126 பேரை பலி கொண்ட நிலநடுக்கத்துக்கு பின் திபெத்தில் 515 முறை நிலஅதிர்வுகள்
- திபெத்தில் நேற்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 14 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீஜிங்:
சீனாவின் தன்னாட்சி பெற்ற பிராந்தியமான திபெத்தை நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் உலுக்கியது. திபெத்தின் புனித நகரங்களில் ஒன்றான ஷிகாட்சேவை தாக்கிய இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 புள்ளிகளாக பதிவானது.
இந்த நிலநடுக்கம் ஷிகாட்சே நகரம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளை கடுமையாக உலுக்கியது. வீடுகள் உள்பட ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 126 பேர் பலியாகினர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
சீன அதிபர் ஜின்பிங்கின் உத்தரவின்பேரில் நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளில் ராணுவத்தினர் களம் இறக்கப்பட்டனர். அவர்கள் கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் சேர்த்து வருகின்றனர்.
கட்டிட இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருப்பதால் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே திபெத்தில் நேற்று முன்தினம் முதலில் 6.8 புள்ளிகள் என்ற அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து, அடுத்தடுத்து 500-க்கும் அதிகமான முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டதாக சீனாவின் நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜனவரி 8-ந் தேதி காலை 8.00 மணி நிலவரப்படி, மொத்தம் 515 அதிர்வுகள் பதிவாகியுள்ளன. இதில் 488 நிலஅதிர்வுகள் ரிக்டர் அளவுகோலில் 3.0 புள்ளிகளுக்கு கீழே இருந்தன. 24 நிலஅதிர்வுகள் 3.0 முதல் 3.9 புள்ளிகள் வரையிலும், 27 நிலஅதிர்வுகள் 4.0 முதல் 4.9 புள்ளிகள் வரையிலும் பதிவாகின" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திபெத்தில் நேற்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள மடோய் நகரில் உள்ளூர் நேரப்படி மாலை 3.44 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 14 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் நேற்றைய நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை.