உக்ரைன் மீது வான்வழி தாக்குதல் நடத்திய ரஷியா - 13 பேர் உயிரிழப்பு
- உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
- ஜபோரிஜியா மீது வான்வழி குண்டுகளை வீசி தாக்கினர்.
உக்ரைன் நாட்டின் ஜபோரிஜியாவில் ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் கிட்டத்தட்ட 13 பேர் உயிரழந்தனர். மேலும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தாக்குதல் மற்றும் உயிரிழப்பு குறித்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தகவல் தெரிவித்தார். மேலும், உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், இரத்த காயம் அடைந்த மக்கள் சாலையிலேயே அவசர படையினர் முதலுதவி சிகிச்சை அளிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், தீயனைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபடும் காட்சிகளும் இடம்பெற்று இருக்கின்றன.
இத்துடன், "ரஷியர்கள் ஜபோரிஜியா மீது வான்வழி குண்டுகளை வீசி தாக்கினர். இது நகரத்தின் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல். இதுவரை டஜன் கணக்கான மக்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அனைவருக்கும் தேவையான உதவிகள் செய்யப்படுகின்றன. துரதிர்ஷ்டவசமாக, 13 பேர் கொல்லப்பட்டனர்."
"அவர்களின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது இரங்கல்கள். துரதிர்ஷ்டவசமாக, உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். சாதாரண பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை அறிந்தும், ஒரு நகரத்தின் மீது வான்வழி குண்டுகளை வீசுவதை விட கொடூரமானது எதுவும் இல்லை."
"ரஷியா அதன் பயங்கரவாதத்திற்காக அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். உக்ரைனில் உயிர்களைப் பாதுகாக்கும் முயற்சிகள் ஆதரிக்கப்பட வேண்டும். வலிமையின் மூலம் மட்டுமே அத்தகைய போரை நீடித்த அமைதியுடன் முடிவுக்குக் கொண்டுவர முடியும்," என்று கூறினார்.