மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்.. இந்தியா, சீனா மக்கள் தொகை வீழ்ச்சி குறித்து மஸ்க் கவலை
- இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடி ஆகவும் சீனாவின் மக்கள் தொகை 141.07 கோடியாகவும் உள்ளது.
- நாட்டின் சராசரி மக்கள் தொகை வளர்ச்சி 0.92 சதவீதமாக உள்ளது.
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் மக்கள் தொகை குறைந்து வருவது குறித்து எலான் மஸ்க் கவலை தெரிவித்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் உள்ளிட்டவற்றின் நிறுவனரும் உலகப் பணக்காரருக்குமான எலான் மஸ்க் மக்கள் தொகை வீழ்ச்சி மனிதகுலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் மக்கள் தொகை 2100 க்குள் 110 கோடிக்கும் கீழ் குறையும் என்றும் சீனாவின் மக்கள் தொகை 73 கோடிக்கு வரும் என்று சுட்டிக்காட்டும் 2020 கிராப் ஒன்றை பகிர்ந்து மஸ்க் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
2023 புள்ளிவிவரப்படி இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடி ஆகவும் சீனாவின் மக்கள் தொகை 141.07 கோடியாகவும் உள்ளது.
சமீபத்தில் வெளியான ஐ.நா. சபை மற்றும் உலக வங்கி, இந்திய சுகாதாரத்துறை ஆகிட்டவற்றின் புள்ளிவிவரப்படி, இந்தியாவின் சராசரி மக்கள் தொகை வளர்ச்சி 0.92 சதவீதமாக உள்ளது.
வருங்காலங்களில் இந்த வளர்ச்சி விகிதம் மேலும் குறையும் என்று அஞ்சப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் மக்கள் தொகை வளர்ச்சியில் பின்தங்கியுள்ள தமிழகத்தில் 0.30 சதவீதம் மட்டுமே மக்கள் தொகை வளர்ச்சி இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் மக்கள் தொகை வீழ்ச்சியை சமாளிக்க மக்கள் குழந்தை பெற்றுக்கொள்ள நிறைய சலுகைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.