உலகம்

காசா: மனிதாபிமான மண்டலத்தில் இஸ்ரேல் தாக்குதல் - குழந்தைகள் உட்பட 50 பேர் பலி

Published On 2025-01-03 12:18 GMT   |   Update On 2025-01-03 12:18 GMT
  • குளிரில் இருந்து பாதுகாத்து கொள்ள தங்கள் கூடாரங்களில் தஞ்சம் அடைந்திருந்தபோது தாக்குதல் நடந்தது.
  • கத்தாரில் நடக்கும் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளை தொடர தூதுக்குழுவை நியமித்துள்ளார்.

நேற்று மற்றும் இன்று காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர். மனிதாபிமான மண்டலமாக அறிவிக்கப்பட்ட இடங்கள் உட்பட பல இடங்களைத் இஸ்ரேல் தாக்கியுள்ளது .

முவாசி மனிதாபிமான வலயத்தில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள், குளிரில் இருந்து பாதுகாத்து கொள்ள தங்கள் கூடாரங்களில் தஞ்சம் அடைந்திருந்தபோது அங்கு தாக்குதல் நடந்துள்ளது.

இந்த தாக்குதலில் மூன்று குழந்தைகள் மற்றும் இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர். தெற்கு காசாவில் உள்ள ஹமாஸ் உள்நாட்டுப் பாதுகாப்புத் தலைவர் மனிதாபிமான வலயத்தில் பதுங்கியிருப்பதாகக் குற்றம் சாட்டி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மேலும் டெய்ர் அல்-பாலாவில் நடந்த மற்றொரு தாக்குதலில் உள்ளூர் பாதுகாப்புக் குழுக்களின் எட்டு உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். தெற்கு காசாவில், கான் யூனிஸில் ஐந்து போலீசார் கொல்லப்பட்டனர்.

ஹமாஸ் தனது சொந்த நோக்கங்களுக்காக உதவியைப் பயன்படுத்துவதாகக் கூறி, இஸ்ரேல் மீண்டும் மீண்டும் காசாவின் காவல்துறையை குறிவைத்துள்ளது. இது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உதவி வழங்குவதில் தடையாக உள்ளது.

மேலும் மூன்று பாலஸ்தீனியர்கள் மகாசியில் தெருவில் நடந்து சென்றபோது கொல்லப்பட்டனர். மகாசி மற்றும் நுஸ்ராத் அகதிகள் முகாம் உட்பட மத்திய காசாவில் நடந்த தாக்குதல்களில் நேற்று பிற்பகுதியிலும் இன்று அதிகாலையிலும் குழந்தைகள் உட்பட குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, கத்தாரில் நடக்கும் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளை தொடர தூதுக்குழுவை அங்கீகரித்துள்ளதற்கு மத்தியில் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளது.

மொசாட், ஷின் பெட் மற்றும் இராணுவத்தின் உறுப்பினர்களை உள்ளடக்கிய தூதுக்குழு இன்று புறப்படும் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஹமாஸ் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. கடந்த 15 மாத கால மோதலில் அமெரிக்கா தலைமையிலான முந்தைய போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் பலமுறை தோல்வியடைந்தன.

Tags:    

Similar News