பாகிஸ்தானில் துப்பாக்கி சண்டை: 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை- ராணுவ அதிகாரி உயிரிழப்பு
- இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை.
- தீவிரவாதிகளிடம் இருந்து வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினார்கள். அன்றில் இருந்து பாகிஸ்தானுக்கு அவர்கள் தலைவலியாக மாறி உள்ளனர்.
ஆப்கானிஸ்தானை சேர்ந்த பயங்கர வாதிகள் பாகிஸ்தானின் சைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாண எல்லைப்பகுதியில் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் பொதுமக்கள், பாதுகாப்பு படை வீரர்கள் பலர் பலியாகி வருகின்றனர்.
தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரித்து வருவதைதொடர்ந்து அவர்களை ஒழிக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு இறங்கி உள்ளது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் கைபர் பக்துன்க்வா தேரா இஸ்மாயில்கான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாகிஸ்தான் உளவு துறைக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்து இருந்த தீவிரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
பாகிஸ்தான் ராணுவத்தினரும் திருப்பி சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 10 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். ராணுவ அதிகாரி ஒருவரும் உயிர் இழந்தார்.
தீவிரவாதிகளிடம் இருந்து ஏராளமான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது.