உலகம்

இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நெருங்கி விட்டோம்: ஹமாஸ் தலைவர்

Published On 2023-11-21 05:48 GMT   |   Update On 2023-11-21 05:48 GMT
  • பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை போர் நிறுத்தம் இல்லை என இஸ்ரேல் திட்டவட்டம்.
  • காசா மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், போர் நிறுத்தம் சாத்தியமாகுமா? என்பது சந்தேகம்தான்.

இஸ்ரேல் நாட்டில் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 1400 பேர் பலியானார்கள். அதனைத்தொடர்ந்து 200-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளை பிடித்துச் சென்றனர்.

இதனால் இஸ்ரேல் ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து காசா மீது தாக்குதலை தொடங்கியது. இடைவிடாமல் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. தற்போது வரை தாக்குதலை நிறுத்தவில்லை. இதனால் வடக்கு காசாவில் உள்ள கட்டடங்கள் இடிந்து சேதமடைந்தன. இதனால் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான உடல்கள் இடிபாடுகளுக்குள் இருந்து மீட்க முடியாத பரிதாப நிலை உள்ளது.

இதற்கிடையே போரை நிறுத்தி காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் செய்ய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்வந்தன. ஆனால், பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என் இஸ்ரேல் தெரிவித்தது. பிணைக்கைதிகளை விடுவிக்க கத்தார் மத்தியஸ்தரராக செயல்பட்டு வருகிறது.

தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் மருத்துவமனைகள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் எகிப்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மருத்துவமனையை ஹமாஸ் அமைப்பினர் தங்களது செயல்பாட்டிற்காக பயன்படுத்தி வந்தனர் என குற்றம்சாட்டி வரும் இஸ்ரேல் ராணுவம், மருத்துவமனைகளில் சோதனை நடத்தி வருகிறது. இரண்டு மூன்று சுரங்கங்கள் மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ளதை கண்டு பிடித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவத்துடன் போர் நிறுத்தம் ஒப்பந்தத்தை நெருங்கி விட்டோம் என ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே "ஹமாஸ் அதிகாரிகள் இஸ்ரேல் ராணுவத்துடன் போர் நிறுத்தம் ஒப்பந்தததை நெருங்கி விட்டார்கள். அதிகாரிகள் தங்களது பதிலை கத்தார் மத்தியஸ்தர்களுக்கு அனுப்பியுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.

முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் ஹமாஸ்- இஸ்ரேல் போர் நிறுத்தம் குறித்த முழுத் தகவல் வெளியாகவில்லை. மேலும், காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையிலும், காசாவில் இருந்து அவ்வப்போது இஸ்ரேல் நோக்கி ஏவுகணை செலுத்தப்பட்டு வரும் நிலையிலும், போர் நிறுத்தம் என்பது சந்தேகமே...

Tags:    

Similar News