குவைத் சுற்றுப்பயணம் முடிந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி
- யோகாவை ஊக்குவித்து வரும் சமூக ஊடக பிரபலங்களை அவர் சந்தித்து உரையாடினார்.
- பிரதமர் மோடியை விமான நிலையத்திற்கு வந்து குவைத் பிரதமர் வழியனுப்பி வைத்தார்.
குவைத்:
பிரதமர் நரேந்திர மோடி குவைத்திற்கு 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நேற்று புறப்பட்டுச் சென்ற அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
குவைத் சென்றடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டு விமான நிலையத்தில் துணை பிரதமர் மற்றும் பாதுகாப்பு மந்திரியான ஷேக் பகத் யூசப் சவுத் அல்-சபா மற்றும் பலர் வரவேற்றனர்.
அதன்பின், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களை சந்தித்து அவர் பேசினார். இந்திய தேசிய கொடியுடன் பிரதமரை வரவேற்ற அவர்கள் பிரதமருக்கு கரம் கூப்பி வணக்கம் தெரிவித்தனர்.
பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய குடிமக்களுக்கான விருது வழங்கப்பட்டது. குவைத்தின் அமீர், ஷேக் மெஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல் சபா, பிரதமர் மோடிக்கு விருது வழங்கி கவுரவம் அளித்துள்ளார்.
தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர் என்ற இந்த விருது நாடுகளின் தலைவர்கள், வெளிநாட்டு ஆட்சியாளர்கள் மற்றும் வெளிநாட்டு அரச குடும்பத்தினர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. இதன்பின்னர், ஷேக் மெஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல் சபாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் பிரதமர் மோடி ஈடுபட்டார்.
இந்நிலையில், குவைத் நாட்டுக்கான 2 நாள் அரசுமுறை பயணம் முடிந்து பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார். இந்தியா புறப்பட்ட பிரதமர் மோடியை காண விமான நிலையத்திற்கு வந்த குவைத் பிரதமர், பின்னர் அவரை வழியனுப்பி வைத்தார்.
இந்தப் பயணத்தின்போது மருந்து, தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவது பற்றி குவைத்தின் அமீருடன் ஆலோசனை மேற்கொண்டார். யோகாவை ஊக்குவித்து வரும் சமூக ஊடக பிரபலங்களையும் அவர் சந்தித்து உரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.