காங்கோவில் சோகம்: ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி 38 பேர் பலி
- ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 38 பேர் உயிரிழந்தனர்.
- மாயமான 100 பேரை தேடும் பணியில் மீட்புக் குழு ஈடுபட்டு வருகிறது.
கின்ஷசா:
மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடான காங்கோவின் இகியுடர் மாகாணத்தில் புசிரா என்ற ஆறு பாய்கிறது.
இகியுடர் மாகாணத்தில் இருந்து நேற்று இரவு அண்டை நகருக்கு புசிரா ஆற்றில் நேற்று படகு ஒன்று புறப்பட்டது. அந்தப் படகில் 150க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட பலர் தங்கள் சொந்த ஊருக்கு அந்தப் படகில் புறப்பட்டுச் சென்றனர்.
இந்நிலையில், ஆற்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் படகில் பயணித்த அனைவரும் ஆற்றில் தத்தளித்தனர்.
இதில் ஆற்றில் மூழ்கி 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 100 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டு வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம் படகு கவிழ்ந்த விபத்தில் 78 பேர் பலியானது நினைவிருக்கலாம்.