உலகம்

இரண்டாவது கட்டமாக 17 பிணைக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

Published On 2023-11-26 01:06 GMT   |   Update On 2023-11-26 06:46 GMT
  • தற்காலிக அமைதி ஒப்பந்தத்தை தொடர்ந்து பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
  • முதல் கட்டமாக இஸ்ரேல், தாய்லாந்தைச் சேர்ந்த 25 பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்

காசா:

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் கடந்த அக்டோபர் 7-ம் தேதி தொடங்கியது. இதில் ஹமாசின் காசா முனை பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தியது. இதில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஒன்றரை மாதங்களுக்கு பிறகு 4 நாள் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்தது. ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்ற இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்காக போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்தது. அதேபோல் இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்களை விடுவிக்க முடிவு செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் போர் நிறுத்தம் தொடங்கியது. அன்று 13 இஸ்ரேலியர்கள், 11 வெளிநாட்டினர் என 24 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது.

2-வது கட்டமாக நேற்று விடுவிக்கப்படும் பிணைக்கைதிகளின் பட்டியல இஸ்ரேலிடம் ஹமாஸ் அமைப்பு கொடுத்தது. அந்த பட்டியலை இஸ்ரேல் ஆய்வு செய்தது.

இதற்கிடையே 2-வது கட்டமாக பிணைக் கைதிகளை விடுவிப்பதில் ஹமாஸ் தாமதம் காட்டுவதாக இஸ்ரேல் குறறம்சாட்டியது. ஆனால் ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறி உள்ளதாக ஹமாஸ் தெரிவித்தது.

வடக்கு காசா பகுதிக்கு நிவாரண பொருட்களை இஸ்ரேல் விநியோகிக்கவில்லை என்றும், சிறையில் நீண்டகால தண்டனையில் உள்ள கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் மறுப்பதாகவும் ஹமாஸ் தெரிவித்தது.

இதனால் பிணைக்கைதிகளை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து பிணைக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் காலக்கெடு விதித்தது.

இந்நிலையில், நள்ளிரவில் 2-வது கட்டமாக பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது. இஸ்ரேலை சேர்ந்த 13 பேர், தாய்லாந்தை சேர்ந்த 4 பேரை செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஹமாஸ் அமைப்பினர் ஒப்படைத்தனர். அவர்கள் ராபா எல்லை வழியாக எகிப்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு இஸ்ரேல் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட பிணைக்கைதிகள் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் சேர்க்கப்பட்டனர். அவர்களை உறவினர்கள் கண்ணீர் மல்க கட்டியணைத்து வரவேற்றனர்.

போர் நிறுத்த ஒப்பந்தப்படி நேற்று முன்தினம் இஸ்ரேல் சிறைகளில் இருந்து 39 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர். நேற்று நள்ளிரவு மேலும் இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டதையடுத்து இஸ்ரேல் சிறைகளில் இருந்து மேலும் 39 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்ட னர். இதில் 33 சிறுவர்கள், 6 பெண்கள் ஆவார்கள்.

இதுவரை 41 பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்று 3-வது கட்டமாக பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர். இதற்கான பட்டியல் பெறப்பட்டுள்ளதாகவும், அதை பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

போர் நிறுத்தம் நாளை முடிவடையும் நிலையில் அது நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags:    

Similar News