உலகம்

திட்டமிட்டபடி பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் முடிவு

Published On 2025-02-13 17:19 IST   |   Update On 2025-02-13 17:19:00 IST
  • 6 வாரகால போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள்.
  • இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறியதாக ஹமாஸ் குற்றம்சாட்டியதால் சிக்கல் ஏற்பட்டது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி வருகிற சனிக்கிழமை பிணயக் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 பேர் உயிரிழந்தனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக கடத்தி சென்றனர்.

இதையடுத்து ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த போருக்கிடையே நவம்பர் மாதம் இறுதியில் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது ஹமாஸ் பிடியில் உள்ள பணயக் கைதிகளில் 100-க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இடைக்கால போர் நிறுத்தம் அமலில் இருக்கும்போது, ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்பதற்கு முன் இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனடிப்படையில் இஸ்ரேல்- காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த மாதம் 19-ந்தேதி அமலுக்க வந்தது. இந்த போர் நிறுத்தம் 6 வாரங்கள் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள பணய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.

அதன்படி, முதற்கட்டமாக ஹமாஸ் தங்கள் பிடியில் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளில் 33 பேரை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. இதற்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளில் 1,904 பேரை விடுதலை செய்ய இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.

தற்போதுவரை ஹமாஸ் அமைப்பினர் தங்கள் பிடியில் உள்ள பணயக் கைதிகளில் 21 பேரை விடுதலை செய்துள்ளது. அதற்கு ஈடாக பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 730 பேரை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது. காசாவில் இன்னும் 76 இஸ்ரேலியர்கள் பணயக் கைதிகளாக உள்ளதாகவும், இதில் 36 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் நம்புகிறது.

ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள பணய கைதிகளை வரும் சனிக்கிழமை (நாளைமறுதினம்) விடுதலை செய்ய வேண்டும்.

ஆனால், இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்ததை மீறிவிட்டதாகவும், ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்தினால் மட்டுமே பணய கைதிகளை விடுதலை செய்வோம் என்றும் ஹமாஸ் அமைப்பினர் திடீரென மிரட்டல் விடுத்தனர். மேலும், சனிக்கிழமை பணயக் கைதிகள் விடுவிக்கமாட்டோம் என ஹமாஸ் தெரிவித்தது.

அதேவேளை, வரும் சனிக்கிழமை அனைத்து பணய கைதிகளும் விடுதலை செய்யப்படவில்லையென்றால் காசாவில் நரகம் வெடிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டலுக்கு மதிப்பு கிடையாது என்று ஹமாஸ் தெரிவித்தது. இது தொடர்பாக ஹமாஸ் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "இரு தரப்புக்கும் இடையே (இஸ்ரேல், ஹமாஸ்) போர் நிறுத்த ஒப்பந்தம் உள்ளது. அந்த ஒப்பந்தத்தை இரு தரப்பும் மதிக்க வேண்டும் என்பதை டிரம்ப் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். டிரம்பின் மிரட்டல் மொழிக்கு மதிப்பு கிடையாது. இந்த மிரட்டல் ஒப்பந்தத்தை மேலும் சிக்கலாக்கும்" எனக் கூறியிருந்தார்.

தற்போதைய 6 வாரகால போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கால அவகாசம் மார்ச் மாத முதல் வாரம் வரை உள்ளது. ஆனால் சனிக்கிழமை ஹமாஸ் பணயக் கைதிகளை விடுதலை செய்யவில்லை என்றால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் மீண்டும் காசா தாக்குதல் நடத்தும் அபாயம் ஏற்பட்டது.

இந்த நிலையில்தான் திட்டமிட்டபடி பணயக் கைதிகள் வரும் சனிக்கிழமை விடுதலை செய்யப்படுவார்கள் என ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஹமாஸ் அமைப்பு "எகிப்து மற்றும் கத்தார் ஆகிய மத்தியஸ்தர்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை செயல்படுத்தும் வகையில் அனைத்து தடைகளையும் விலக்குவதற்கான பணிகளை மேற்கொள்வோம் என உறுதி அளித்துள்ளனர். இதனால் சனிக்கிழமை பணயக் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள். இது வெளிப்படையாக மிகப்பெரிய பிரச்சனையை தீர்க்கும்" எனத் தெரிவித்துள்ளது.

6 வாரகால போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர், போர் நிறுத்தம் நீடிக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது. ஒருவேளை போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட வில்லை என்றால் மீண்டும் காசா மீது இஸ்ரேல தாக்குதலை தொடங்க வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News