தமிழக மீனவர்கள் எல்லை தாண்டக்கூடாது- இலங்கை அரசு வேண்டுகோள்
- இலங்கைக்கு இந்தியா ஏராளமான உதவிகளை செய்து வருவதை நாங்கள் அறிவோம்.
- வட இலங்கை மக்கள் மீன் பிடித்தலையே ஒரே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.
கொழும்பு:
தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டக்கூடாது எனவும், அவர்கள் தங்கள் எல்லைக்குள் நுழையாமல் மத்திய அரசு தடுக்க வேண்டும் என்றும் இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை துறைமுகம், போக்குவரத்துத்துறை மந்திரி பிமல் ரத்னநாயகா செய்தியாளர்களிடம் கூறுகையில், 'இலங்கைக்கு இந்தியா ஏராளமான உதவிகளை செய்து வருவதை நாங்கள் அறிவோம். ஆனால் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டாமல் இந்தியா தடுத்தால் அது யாழ்ப்பாண மக்களுக்கு செய்யும் மிகப்பெரும் உதவியாக இருக்கும்.
வட இலங்கை மக்கள் மீன் பிடித்தலையே ஒரே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். மன்னார், தலைமன்னாரில் வேறு எந்த தொழிற்சாலையும் இல்லை. மீனவர்கள் எல்லை தாண்டாமல் தடுத்தால் அதற்காக இந்தியாவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம்' என தெரிவித்தார்.