வேலைக்காக தினமும் 700 கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் செல்லும் பெண்
- வீட்டில் இருந்து வேலை செய்வதைவிட அலுவலகத்துக்கு சென்று வேலை செய்வதே சிறந்தது.
- சக ஊழியர்களுடன் நேரடியாக இணைந்து பணி செய்வதால் வேலை எளிதாகிறது.
உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களிலும் போக்குவரத்துக்காக கார்கள், பஸ்கள், ரெயில்கள் போன்றவற்றை அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் மலேசியாவில் வசிக்கும் இந்தியாவை சேர்ந்த ரேச்சல் கவுர் என்ற பெண் வேலைக்காக தினமும் 700 கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பயணம் செய்வது இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.
ரேச்சல் கவுர் மலேசியாவில் உள்ள ஏர்-ஆசியா நிறுவனத்தின் நிதி நடவடிக்கைகளில் உதவி மேலாளராக பணிபுரிகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இவர் தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளை முடித்துவிட்டு 5 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு பினாங்கு விமான நிலையத்தை அடைகிறார். அங்கிருந்து 6.30 மணிக்கு கோலாலம்பூருக்கு விமானத்தில் புறப்பட்டு 7.45 மணிக்கு அலுவலகம் செல்கிறார். வேலை முடிந்தவுடன் இரவு 8 மணிக்கு மீண்டும் வீட்டிற்கு திரும்புகிறார். தினமும் சுமார் 700 கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் அவர் கூறுகையில், விமான செலவுகளை விட வீட்டு வாடகை அதிகமாக உள்ளது.
வீட்டில் இருந்து வேலை செய்வதைவிட அலுவலகத்துக்கு சென்று வேலை செய்வதே சிறந்தது. ஏனெனில் சக ஊழியர்களுடன் நேரடியாக இணைந்து பணி செய்வதால் வேலை எளிதாகிறது. அலுவலக பணிகளில் முழு கவனம் செலுத்த முடிகிறது. தினமும் வீட்டிற்கு திரும்பியதும் குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்க முடிகிறது. இந்த அட்டவணை எனது வாழ்வில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது என்றார். ரேச்சல் கவுர் மாதம் ரூ.35 லட்சம் சம்பளம் வாங்குகிறாராம். அவர் தினமும் காலையில் எழுந்திருப்பது சோர்வை ஏற்படுத்தினாலும், இரவு வீடு திரும்பி குழந்தைகளை பார்க்கும் போது அந்த சோர்வு மாயமாகி விடுவதாக கூறுகிறார். மேலும் விமான பயணத்தின் போது இசை கேட்பது, இயற்கையை ரசிப்பது போன்றவை தனக்கான நேரமாக மாறி உள்ளது என்றார்.