எல்லையை திறந்த இஸ்ரேல்: வடக்கு காசாவுக்கு கூட்டமாக படையெடுக்கும் பாலஸ்தீனியர்கள்
- வடக்கு காசாவுக்கு நெட்சாரிம் பாதை வழியாக நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
- பிரதான சாலை முழுவதும் மனித தலைகளாக காட்சி அளிக்கிறது.
காசா:
இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 15 மாதங்களுக்கு பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.
இதில் ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவித்தது. அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்கிறது. போர் நிறுத்தத்தையடுத்து இடப்பெயர்ந்த மக்கள் தங்களது பகுதிகளுக்கு திரும்பி வருகிறார்கள்.
இதற்கிடையே ஒப்பந் தப்படி, பணய கைதிகளில் அர்பெல் யாஹுட் என்ற பெண் பிணைக்கைதியை ஹமாஸ் விடுவிக்கவில்லை.
அவர் விடுதலை செய்யப்படும் வரை பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவுக்கு திரும்ப அனுமதிக்க மாட்டோம் என்று இஸ்ரேல் தெரிவித்தது. அவர் வருகிற 1-ந்தேதி விடுவிக்கப்படுவார் என்று ஹமாஸ் தெரிவித்தது.
இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்பட்டதையடுத்து வடக்கு காசாவுக்குள் பாலஸ்தீனியர்கள் நுழைய இஸ்ரேல் அனுமதி அளித்தது.
இதனால் லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கூட்டம் கூட்டமாக வடக்கு காசாவுக்கு திரும்புகிறார்கள். அவர்கள் நெட்சாரிம் பாதை வழியாக நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால் கடற்கரையை ஒட்டிய பிரதான சாலை முழுவதும் மனித தலைகளாக காட்சி அளிக்கிறது.
காசா மீது இஸ்ரேல் போரை தொங்கியபோது வடக்கு காசாவை முதல் முதலில் குறிவைத்து சரமாரியாக தாக்கியது. அங்கிருந்த கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் முற்றிலும் சேதமடைந்தன.
தாக்குதல் காரணமாக சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வடக்கு காசாவில் இருந்து தெற்கு காசாவுக்கு இடம் பெயர்ந்தனர். அவர்கள் அகதிகள் முகாம், ஆஸ்பத்திரிகள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் தஞ்சம் அடைந்திருந்தனர்.