search icon
என் மலர்tooltip icon

    இஸ்ரேல்

    • செசாரியா [Caesarea] பகுதியில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் வீடு குறிவைக்கப்பட்டது.
    • இந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் ஜனாதிபதி ஈசாக் ஹெர்ஜாக் கண்டனம் தெரிவித்ததார்.

    பாலஸ்தீனம் மீது கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் லெபனான் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலிய பகுதிகள் மீது லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் அவ்வப்போது டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி வடக்கு இஸ்ரேலில் செசாரியா [Caesarea] பகுதியில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் வீட்டைக் குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சேதம் ஏதும் பதிவாகவில்லை. இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக நேதன்யாகு வீட்டை குறிவைத்து வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    நேதன்யாகு வீட்டின் தொட்டப் பகுதி திடீரென தீப்பிடித்து பற்றி  எரியும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது இந்த சம்பவம் நடக்கும்போது, நேதன்யாகு மற்றும் அவருடைய குடும்பத்தினர் வீட்டில் இல்லாததால் அவர்கள் உயிருக்கு பாதிப்பு இல்லை என இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் கார்ட்ஸ் தெரிவித்தார்.

    இந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் ஜனாதிபதி ஈசாக் ஹெர்ஜாக் கண்டனம் தெரிவித்ததுடன், பொதுவெளியில் வன்முறை அதிகரித்து இருப்பதற்கு எதிராக கடும் எச்சரிக்கையும் தெரிவித்து இருக்கிறார். இதுவரை இந்த சம்பவத்துக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் தாக்குதல் குறித்த விசாரணை தொடங்கியுள்ளது.

    • இஸ்ரேல் முதலில் ஈரான் அணு நிலையங்கள் மீதுதான் தாக்குதல் நடத்த வேண்டும் என்று பிரசுரத்தில் கூறினார்.
    • அயத்துல்லா கமேனிக்கு இஸ்ரேலை விட பயம் தரும் விஷயம் ஒன்று இருக்கிறது.

    பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மீது தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வரும் இஸ்ரேல் மத்திய கிழக்கில் முக்கிய நாடாக விளங்கும் ஈரானையும் குறிவைத்து வருகிறது. காசா போருக்கு எதிராக இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பைட்டர் ஜெட்கள் மூலம் ஈரான் நிலைகள் மீது இஸ்ரேல் தாக்கியது. ஈரான் அணுசக்தி நிலையங்கள் மற்றும் எண்ணெய் கிணறுகள் மீது எந்த நேரமும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்ற அபாய சூழல் நிலவி வருகிறது. ஆனால் இஸ்ரேலுக்கு ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு கடிவாளம் போட்ட நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் தனது பிரசாரத்தின்போது எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவதுபோல் ஒரு கருத்தை தெரிவித்தார்.

    அதாவது, இஸ்ரேல் முதலில் ஈரான் அணு நிலையங்கள் மீதுதான் தாக்குதல் நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஈரான் மக்களுக்கு வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசும் அவர், [ஈரான் மதத்தலைவர்] அயத்துல்லா கமேனிக்கு இஸ்ரேலை விட பயம் தரும் விஷயம் ஒன்று இருக்கிறது.

     

    அது நீங்கள் தான்.. ஈரான் மக்கள். அதனால்தான் அவர்கள் உங்கள் நம்பிக்கைகளை நசுக்குவதற்கும் உங்கள் கனவுகளைத் தடுக்கவும் அதிக நேரத்தையும் பணத்தையும் செலவிடுகிறார்கள்.

    நம்பிக்கையை இழக்காதீர்கள், சுதந்திர உலகில் இஸ்ரேலும் மற்றவர்களும் உங்களுடன் நிற்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்று பேசியுள்ளார். மேலும் இஸ்ரேலை தாக்க நினைத்தால் ஈரானின் மொத்த பொருளாதாரமும் முடங்கும் என்றும் நேதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதற்கிடையே  புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் கடந்த சில நாள்களில்மூன்று பேசியிருக்கிறேன். இஸ்ரேல் - அமெரிக்கா கூட்டணியை இன்னும் வலிமையாக இணைப்பது குறித்துப் பேசினோம்" என்று நேதன்யாகு பேசியதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில் டிரம்ப்பும் நானும் இணைந்து ஈரான் விவகாரத்தை கவனித்து வருகிறோம் என்றும் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    • தாக்குதலுக்கு ஒப்புதல் வழங்கியதே தான்தான் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்
    • கியாத் அடா பகுதியில் வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

    லெபனானில் கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி ஹிஸ்புல்லா கிளர்ச்சி அமைப்பு உறுப்பினர்களின் பாக்கெட்டுகளில் இருந்த தொலைத்தொடர்பு கருவியான பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. இந்த டெக்கனிகல் தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று யூகிக்க முடிந்தாலும் இது பற்றி அந்நாடு வாய் திறக்காமல் இருந்தது.

    ஆனால் அந்த தாக்குதலுக்கு ஒப்புதல் வழங்கியதே தான்தான் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தற்போது பொதுவெளியில் பகிரங்கமாக தெரிவித்தார்.இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேலிய பகுதிகள் மீது ஹிஸ்புல்லா சரமாரியாக நடத்திய ராக்கெட் தாக்குதல் நிலைமையை மோசமாகியுள்ளது.

     

    லெபனானில் இருந்து ஏவப்பட்ட சுமார் 165 ராக்கெட்டுகள் வடக்கு இஸ்ரேலில் உள்ள ஹைபா பே பகுதியில் மக்கள் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளின் மேல் பாய்ந்தது.. இந்த தாக்குதலில்  1 வயது பெண் குழந்தை, 27 வயது பெண், 35 வயது ஆண் உள்பட மொத்தம் 7 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 80 ராக்கெட்டுகளை இஸ்ரேல் வான் பாதுகாப்பு படை இடைமறித்து அளித்ததால் பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டது. 

    மீதமுள்ள ராக்கெட்டுகள் திறந்த வெளிகளில் விழுந்தன. கியாத் அடா பகுதியில் வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. ஹைபா பகுதியில் இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவே பெரிய அளவிலானது என்று அறிக்கை வெளியாகி உள்ளது. மேலும் ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் இஸ்ரேல் ராணுவம் அலர்ட்டில் உள்ளது.  தற்போதைய தாக்குதல் குறித்து கூறியுள்ள இஸ்ரேல் ராணுவம், ஹிஸ்புல்லா இந்த ராக்கெட்டுகளை ஏவ பய்னபடுத்திய லான்சர்களை டிரோன் தாக்குதல் மூலம் அழித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது.

    • சட்டத்திற்கு 61 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் 41 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • காசா முனை அல்லது வேறு பகுதிக்கு 20 ஆண்டுகள் வரை நாடு கடத்தப்படுவார்கள்.

    இஸ்ரேல் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்துபவர்களின் குடும்பங்களை வெளியேற்றுவதற்கு வழிவகை செய்யும் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கட்சி மற்றும் அவருடைய ஆதரவு வலதுசாரி கட்சிகள் இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன. பாராளுமன்றத்தில் 61 உறுப்பினர்கள் இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். 41 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பாராளுமன்றத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் நீதிமன்றம் இந்த சட்டத்திற்கு தடைவிதிக்க வாய்ப்புள்ளதாக சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

    இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனர்கள், இணைக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ளவர்கள், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களின் தாக்குதல் குறித்து முன்னதாக தெரிந்துள்ளவர்களாக இருந்தால், பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவு அல்லது அடையாளத்தை தெரிவிப்பவர்களாக இருந்தால் இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள். அவர்கள் ஏழு முதல் 20 ஆண்டுகளுக்கு காசா முனை அல்லது மற்ற பகுதிக்கு நாடு கடத்தப்படுவார்கள்.

    ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்கு இந்த சட்டம் பொருந்துமா? என்பது தெளிவாகத் தெரியவில்லை, அங்கு இஸ்ரேல் ஏற்கனவே தாக்குபவர்களின் குடும்ப வீடுகளை இடிக்கும் நீண்டகாலக் கொள்கையைக் கொண்டுள்ளது.

    இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் சொந்த நாட்டிற்குள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர்.

    • இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
    • ஹமாஸ் ஆயுதக்குழுவினரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    காசா:

    காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

    மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

    இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.

    அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், காசா முனையில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர். ஹமாஸ் ஆயுதக்குழுவினரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    • ஹிஸ்புல்லாவின் நாசர் பிரிகேட் ராக்கெட் பிரிவின் உயர் தளபதி ஜாபர் காதர் பவுர் கொல்லப்பட்டார்
    • பெட்ரோன் பகுதிக்குள் இஸ்ரேல் கடற்படையின் சிறப்பு கமாண்டோக்கள் தடாலடியாக நுழைந்தனர்

    பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட 43 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வருடமாக தாக்குதல் நடத்தியும் ஹமாஸ் அமைப்பை அழிக்க முடியமால் இஸ்ரேல் திணறி வருகிறது.

    இதற்கிடையே லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸுக்கு ஆதராவாக செயல்படும் ஹிஸ்புல்லாவை குறிவைக்கும் இஸ்ரேல் அதன் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை கொன்றது. தொடர்ந்து அடுத்த தலைவராக அறியப்பட்ட ஹாசன் ஷபிதைனி கொல்லப்பட்டார்.

    எனவே தற்போது நைம் காசிம் ஹிஸ்புல்லா தலைவராகத் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை நிறுத்திக்கொண்டால் அமைதிப் பேச்சுவார்த்தைக்கும் தயார் என்று அவர் தெரிவித்தார். ஆனால் அமைதி பேச்சுவார்த்தையை விரும்பாத இஸ்ரேல் ஈரான் உடனும் வம்பிழுத்து வருகிறது.

    அந்நாட்டின் அணு ஆயுத தளங்களை தாக்கப்போவதாக இஸ்ரேல் மிரட்டி வருகிறது. இந்நிலையில் லெபனானின் இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா முக்கிய தளபதி உயிரிழந்துள்ளார்.

    தெற்கு லெபனானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் நாசர் பிரிகேட் ராக்கெட் பிரிவின் உயர் தளபதி ஜாபர் காதர் பவுர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீதான பல தாக்குதலுக்கு அவர் மூளையாக செயல்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே இஸ்ரேலில் இருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லெபனானின் கடற்கரை நகரமான பெட்ரோன் பகுதிக்குள் இஸ்ரேல் கடற்படையின் சிறப்பு கமாண்டோக்கள் தடாலடியாக நுழைந்தனர். அவர்கள் கடற்கரை அருகே உள்ள வீட்டில் பதுங்கி இருந்த ஹிஸ்புல்லா கடற்படை தளபதி இமாத் ஹமீசை கைது செய்தனர். இவர் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த உறுப்பினராகவும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    • மத்திய கிழக்கில் மிகப்பெரிய அளவிலான மோதல் வெடிக்கும் என அஞ்சப்படுகிறது.
    • லெபனானில் இருந்து ஏவப்பட்டதாக கூறப்படுகிறது.

    இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 1-ந்தேதி ஈரான் மிகப்பெரிய அளவில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் தற்காப்புக்காக நடத்தப்பட்டதாக ஈரான் கூறியது. சுமார் 180 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டன. இஸ்ரேலில் உள்ள ராணுவ முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரான் ராணுவம் தெரிவித்தது.

    இருப்பினும் இதில் பெரும்பாலான ஏவுகணைகள் இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்பின் மூலம் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது. அதே சமயம், இந்த தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் எனவும் இஸ்ரேல் அரசு தெரிவித்திருந்தது.

    இந்த சூழலில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகே உள்ள ராணுவ இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் பாதுகாப்பு படை கடந்த அக்டோபர் 26-ந்தேதி அதிகாலை அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் தங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என ஈரான் கூறியுள்ளது. அதே சமயம், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2 ஈரான் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியானது.

    இஸ்ரேலின் தாக்குதல் சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசன விதிகளுக்கு எதிரானது என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், ஐ.நா. சாசனம் 51-வது பிரிவின்படி, ஈரானுக்கு தங்களை தற்காத்துக் கொள்வதற்கான உரிமையும், வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்க வேண்டிய கடமையும் உள்ளது என ஈரான் அரசு கூறியிருந்தது.

    இந்த நிலையில், இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி மிரட்டல் விடுத்துள்ளார். தலைநகர் தெஹ்ரானில் மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், "ஈரான் மற்றும் ஹமாஸ், ஹிஸ்புல்லா உள்ளிட்ட எதிர்ப்பு கூட்டணிகளுக்கு எதிராக, எதிரிகளான அமெரிக்காவும், இஸ்ரேலும் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்" என்று எச்சரித்தார்.

    இந்நிலையில், ஈரான் தலைவரின் மிரட்டலை தொடர்ந்து இஸ்ரேலின் திரா நகரின் மீது இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவை லெபனானில் இருந்து ஏவப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலானவை இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்புகளால் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும், திரா நகரில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தை தாக்கிய ஒரு ஏவுகணையால் 11 பேர் படுகாயமடைந்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல் ராணுவம் ஏற்கனவே காசா முனையில் ஹமாஸ் அமைப்பினரோடும், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரோடும் போரிட்டு வருகிறது. இந்த சூழலில், ஈரான் தலைவரின் எச்சரிக்கையை தொடர்ந்து இஸ்ரேல் மீது தீவிர தாக்குதல்கள் நடத்தப்பட்டால், மத்திய கிழக்கில் மிகப்பெரிய அளவிலான மோதல் வெடிக்கும் என அஞ்சப்படுகிறது.

    • உயர் சக்தி லேசரைப் பயன்படுத்தி ஏவுகணைகளை வீழ்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • சிறிய, இலகுவான மற்றும் ரேடாரில் இருந்து தப்பிக்கும் டிரோன்கள் உட்பட இலக்குகளை அயன் பீம் அழிக்கும்.

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    இப்போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. அதே போல் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீதும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் அடிக்கடி ஏவுகணைகளை வீசி தாக்குகிறார்கள்.

    இதற்கிடையே ஈரானும் சமீபத்தில் இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியது.

    ஏவுகணை உள்ளிட்ட வான்வழித் தாக்குதலை தடுக்க இஸ்ரேல் அயன் டோம் என்ற வான் பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி வருகிறது. இதில் ரேடார் மற்றும் தாமிர் இடைமறிப்பு ஏவுகணைகள் உள்ளன. அவை இஸ்ரேல் மீது ஏவப்படும் ராக்கெட்டுகள் அல்லது ஏவுகணைகளைக் கண்காணித்து நடு வானில் தாக்கி அழிக்கும்.

    இந்த நிலையில் இஸ்ரேல் மீதான தாக்குதல் அபாயம் அதிகரித்துள்ள நிலையில் அந்நாடு அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்பான அயன் பீம்மை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

    அயன் பீம், நூற்றுக்கணக்கான மீட்டர்கள் முதல் பல கிலோ மீட்டர்கள் வரை ஒளியின் வேகத்தில் ஈடுபட முடியும். உயர் சக்தி லேசரைப் பயன்படுத்தி ஏவுகணைகளை வீழ்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    சிறிய, இலகுவான மற்றும் ரேடாரில் இருந்து தப்பிக்கும் டிரோன்கள் உட்பட இலக்குகளை அயன் பீம் அழிக்கும். அயன் டோமும் கடினமாக உள்ள இலக்குகளையும் தாக்கும். இது விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

    இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, அயன் பீம் சிறிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும். பாலிஸ்டிக் ஏவுகணைகள் போன்ற பெரிய இலக்குகளையும் சமாளிக்கும் திறன் கொண்டது.

    இந்த லேசர் பாதுகாப்பு அமைப்பு நாட்டின் அயர்ன் டோம் மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளை பூர்த்தி செய்யும். இது போரின் புதிய சகாப்தத்தை அறிவிக்கும் என்று தெரிவித்தது.

    அயர்ன் டோமை இயக்கும் செலவில் ஒரு பகுதியிலேயே அயன் பீம் அமைப்பு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • இஸ்ரேல் தீவிர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
    • இஸ்ரேலுடன் எவ்விதமான ராணுவ ஒத்துழைப்பும் இல்லை என எகிப்து ராணுவம் கூறி உள்ளது.

    காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போர் வெடித்தது. காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக் கட்டும் வரை ஓய மாட்டோம் எனக் கூறியுள்ள இஸ்ரேல் தீவிர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் மீது மட்டும் இன்றி அந்த அமைப்பிற்கு ஆதரவாக உள்ள ஹிஸ்புல்லா மீதும் தாக்குதலை முன்னெடுக்கிறது இஸ்ரேல்.

    இதற்கிடையே சுமார் 1½ லட்சம் கிலோ வெடிமருந்துகளுடன் இஸ்ரேல் ராணுவத்துக்கு சொந்தமான எம்.வி. கேதரின் கப்பல் அலெக்சாண்ட்ரியா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. எனவே இந்த ராணுவ நடவடிக்கைகளில் இஸ்ரேலுக்கு ஆதரவாக எகிப்து செயல்படுவதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால் இஸ்ரேலுடன் எவ்விதமான ராணுவ ஒத்துழைப்பும் இல்லை என எகிப்து ராணுவம் கூறி உள்ளது.

    • இரண்டு குழுக்கள் உளவுப்பணியில் ஈடுபட்டதாக இஸ்ரேல் கண்டுபிடித்தது.
    • அதனைத் தொடர்ந்து ஒரு தம்பதி ஈரானுக்கு உளவு வேலை பார்த்துள்ளதாக கைது செய்துள்ளது.

    இஸ்ரேல்- காசா இடையிலான போர் காரணமாக ஈரானுக்கும்- இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் போக்கு அதிகரித்துள்ளது. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வைத்து கொள்ளப்பட்டதற்கு பிறகு இந்த மோதல் மேலும் அதிகரித்துள்ளது.

    ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும விதமாக ஈரான் கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. கடந்த வாரத்தில் இஸ்ரேல் பதிலடியாக ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.

    இதற்கிடையே இரண்டு தரப்பிலும் இருந்து உளவு பார்க்க ஆட்களை நியமிப்பதில் தீவிரம் காட்டப்படுகிறது. இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறை ஈரானில் உளவாளிகளை வைத்துதான் இஸ்மாயில் ஹனியேவை கொலை செய்ததாக ஈரான் குற்றம்சாட்டியது.

    ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தும்போது நேரடியாக தாக்குதல் நடத்த முடியாது. அங்குள்ள ராணுவ நிலைகள், முக்கியமான வளங்கள் எங்கே இருக்கின்றன போன்ற ரகிசிய தகவலை பெற வேண்டும். அதற்காக உளவு சொல்லக் கூடியவர்களை தயார் செய்வார்கள். தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களை அங்கு அனுப்பி வைப்பார்கள். இல்லை எனில் பணம் கொடுத்து அந்த நாட்டை சேர்ந்தவர்களையே உளவு பார்க்கும் பணியில் ஈடுபடுத்துவார்கள்.

    இந்த உளவுப் பணியில் இஸ்ரேல் மிகவும் பயங்கரமாக செயல்படும். அவர்கள் யாரை உளவு பார்க்க பணியமர்த்தியுள்ளார் என எதிரி நாடுகளால் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவிற்கு மொசாட் தனது உளவுப்பணிகளை செய்து வருகிறது.

    அப்பேற்பட்ட மொசாட் உள்ள இஸ்ரேல் நாட்டிலேயே ஈரான் உளவு பார்ப்பதற்கான ஆட்களை தாயர் படுத்தியுள்ளது என்ற செய்தி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

    கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இரண்டு குழுக்கள் ஈரானுக்கு உளவு பார்த்ததாக, அதில் உள்ளவர்களை கைது செய்தது இஸ்ரேல் போலீஸ். இந்த நிலையில் தற்போது ஒரு தம்பதி உளவு வேலை பார்த்தாக சந்தேகித்து கைது செய்துள்ளனர்.

    இஸ்ரேலியர்களை தொடர்ந்து உளவாளி வேலைகளுக்கு அமர்த்தும் ஈரானின் முயற்சிகள் முறியடிக்கப்படும் என இஸ்ரேல் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

    இஸ்ரேலின் மத்திய நகரான லாட்டை சேர்ந்த அந்த ஜோடி, தேசிய கட்டமைப்பு, பாதுகாப்பு இடங்கள் போன்றவை தொடர்பாக தகவல் சேகரித்துள்ளனர்.

    • அக்டோபர் 1-ந்தேதி லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது.
    • அதன்பின் லெபனானில் இருந்து இஸ்ரேல் மக்கள் மீது தாக்கப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.

    ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரிமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    ஒரு ஏவுகணை தாக்குதல் மூலம் ஐந்து பேர் உயிரிழந்தனர் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மற்றொரு ஏவுகணை தாக்கப்பட்டதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

    லெபனானில் இருந்து 25-க்கும் மேற்பட்ட ஏவுகணகைள் இஸ்ரேல் எல்லையை தாக்கின. ஆலிவ் அறுவடை செய்து கொண்டிருந்த மக்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    வடக்கு இஸ்ரேலில் உள்ள மெடுலா என்ற இடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 வெளிநாட்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தியது. அதன்பின் இஸ்ரேலில் உள்ள மக்கள் மீது நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.

    லெபனான் மற்றும் காசாவில் போர் நிறுத்தம் கொண்டு வர அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வரம் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    கடந்த வருடத்தில் இந்து லெபனான் மீது இஸ்ரேல நடத்திய தாக்குதலில 2800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 13 ஆயிரம் காயம் அடைந்துள்ளனர்.

    • ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்.
    • முதன்முறையாக கிராம மக்களை வெளியேறும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தியது. காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது.

    இதனால் இஸ்ரேல் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள இஸ்ரேலியர்கள் அவர்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

    அவர்களை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்துவதுதான் எங்களது போரின் திட்டம் என இஸ்ரேல் கடந்த சில வாரங்களுக்கு முன் தெரிவித்தது. அத்துடன் லெபனான் பகுதிகளில் தாக்குதலை தீவிரப்படுத்தியது. அத்துடன் குறைந்த அளவு தரைவழி தாக்குதலையும் நடத்தியுள்ளது.

    தொடர் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் மற்றும் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருந்தவரையும் தாக்குதல் நடத்தி கொன்றது.

    இந்த நிலையில் கிழக்கு லெபனானில் உள்ள பால்பெக் நகரை குறிவைத்துள்ளது. இதனால் அந்த நகரில் வசித்து வரும் மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    காலி செய்ய சொல்லும் இடத்தில் யுனெஸ்கோ பாரம்பரிய பழங்காலத்து ரோமன் டெம்பிள் காம்ப்ளக்ஸ் உள்ளது.

    லெபனான் சுகாதாரத்துறை அமைச்சர், கடந்த ஆண்டு அக்டோபர் 8-ந்தேதிக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலால் 2,790 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 12,700 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    பால்பெக் நகர் பெகா பள்ளத்தாக்கிற்கு செல்லும் முக்கிய வழியாகும். இந்த பகுதிகளை ஏற்கனவே இஸ்ரேல் சுற்றி வளைத்துள்ளது.

    ஹிஸ்புல்லாவை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், முதன்முறையாக வெளியேறும் எச்சரிக்கை விடுத்துள்ளது இஸ்ரேல்.

    ×