இலக்குடன் நடத்தப்படும் துல்லிய ராணுவ நடவடிக்கை - இஸ்ரேல் அறிக்கை
- மருத்துவமனை முழுவதுமாக ராணுவம் வசம் வந்து விட்டது
- பணயக்கைதிகளையும், பயங்கரவாதிகளையும் தேடி வருகிறது ராணுவம்
காசாவில் மறைந்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளை முற்றிலும் ஒழிக்க, இஸ்ரேல் தொடர்ந்திருக்கும் போர், 35 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது.
இந்நிலையில், காசா பகுதியில் உள்ள அல் ஷிபா மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளை இஸ்ரேலிய ராணுவ படை தங்கள் வசம் கொண்டு வந்து விட்டது.
அங்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்களும் குண்டு வீச்சிற்கு பயந்து அங்கு தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கு எரிபொருள், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாததால் உயிரிழப்புகளை தடுக்க இஸ்ரேலுக்கு போர்நிறுத்த கோரிக்கைகள் பல நாடுகளிலிருந்து வந்த வண்ணம் உள்ளது.
ஆனால், இதனை புறக்கணித்த இஸ்ரேல், அந்த மிக பெரிய மருத்துவமனை முழுவதும் கண்காணிப்பை அதிகப்படுத்தி வருகிறது. அல் ஷிபா மருத்துவமனை, ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு புகலிடமாக உள்ளதாகவும், இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பணயக்கைதிகள் அங்கு மறைக்கப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் கூறி வருகிறது.
தொலைத்தொடர்பு முழுவதும் துண்டிக்கப்பட்டு விட்ட நிலையில் அங்குள்ளவர்களின் உண்மை நிலை குறித்து விவரங்கள் ஏதும் இல்லை.
இந்நிலையில் தற்போது அங்குள்ள நிலைமை குறித்து, "அல் ஷிபா மருத்துவமனையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும், ஒரு குறிப்பிட்ட இலக்குடன், துல்லிய ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எங்கள் போர், ஹமாஸ் அமைப்பினருடன் தான்; பொதுமக்களுடன் அல்ல" என இஸ்ரேல் ராணுவம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.