உலகம்

"கொல்லப்படுவதே நன்றாக இருந்திருக்கும்.." இடிபாடுகளுக்கிடையே வாழ்க்கையை தேடும் காசா மக்களின் அவல நிலை!

Published On 2025-02-25 18:12 IST   |   Update On 2025-02-25 18:12:00 IST
  • ஆறு வார போர்நிறுத்தம் வரும் சனிக்கிழமை முடிவடைய உள்ளது.
  • அவர்கள் கட்டடங்களை மட்டும் அழிப்பதில்லை, அவர்கள் எங்களையும் எங்கள் அடையாளத்தையும் அழிக்கிறார்கள்

'தற்காலிக' போர் நிறுத்தம்

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 15 மாதங்களுக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,700 பேரும், பாலஸ்தீன தரப்பில் சுமார் 47,000 பேரும் கொல்லப்பட்டனர்.

போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவித்து வருகின்றனர். அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.

இந்நிலையில் இடிபாடுகளால் சூழப்பட்ட காசாவுக்கு திரும்பிய லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இடத்தையும் வாழ்க்கையும் மீண்டும் கட்டமைக்க போராடி வருகின்றனர்.

 

இடிபாடுகளுக்கிடையில் வடக்கு காசா

ஐநா கூற்றுப்படி, காசாவில் ஒரு மாதமாக நீடிக்கும் போர் நிறுத்தத்தின் கீழ் கிட்டத்தட்ட 600,000 பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவிற்குள் மீண்டும் வந்தனர்.

அவர்களின் ஒரு குடும்பம் ராவ்யா தம்பூராவினுடையது. தனது இளம் மகன்களுடன் இடிந்து விழுந்த கட்டிடங்கள் மற்றும் குவிந்த இடிபாடுகளுக்கிடையில் வாழ்ந்து வருகிறார்.

16 மாத காலப் போருக்கு பிறகு தம்பூரா தனது இடிபாடுடைய வீட்டுக்கு திரும்பி வந்தார். குழாய் நீர், மின்சாரம் என அத்தியாவசிய வசதிகள் இல்லாமல், சுற்றியுள்ள இடிபாடுகளை அகற்ற எந்த கருவிகளும் இல்லாமல் அவர்கள் திகைத்து நிற்கின்றனர்.

இதுவே அங்கு திரும்பி வந்த 600,000 சொச்சம் மக்களின் சிரமமும் ஆகும். மறுகட்டமைப்பு வேலையைத் தொடங்க வழி இல்லை. இடிபாடுகளுக்கிடையில் என்றென்றும் வாழும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

"சிலர் போர் ஒருபோதும் முடிவடையாமல் இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். கொல்லப்படுவது நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறார்கள்," என்று தம்பூரா கூறுகிறார். "நீண்ட காலத்திற்கு நாம் என்ன செய்வோம் என்று எனக்குத் தெரியவில்லை. என் மூளை எதிர்காலத்திற்கான திட்டமிடலை நிறுத்தியது" என்று அவர் கூறுகிறார்.

 

எதிர்காலம் என்ன?

ஆறு வார போர்நிறுத்தம் வரும் சனிக்கிழமை முடிவடைய உள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்பது நிச்சயமற்றது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் முடிவடையும் போது அமைதி நீடிக்க உத்தரவாதம் இல்லை. மீண்டும் சண்டை வெடித்தால், வடக்கு காசாவுக்கு திரும்பியவர்கள் நிலை மீண்டும் முன்போலவே நரகமாக மாறும்.

உலக வங்கி, ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேலின் குண்டுவீச்சு தாக்குதல்களால் முழு இடமும் அழிந்த பின்னர், காசாவை மீண்டும் கட்டியெழுப்ப சுமார் 53 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  

 ஐ.நா.வின் கூற்றுப்படி, போர் நிறுத்தத்துக்குப் பின், மனிதாபிமான உதவி அமைப்புகள் பணிகளை முடுக்கிவிட்டன. இலவச சமையலறைகள் மற்றும் நீர் விநியோக நிலையங்களை அமைத்தல் மற்றும் காசா முழுவதும் லட்சக்கணக்கான மக்களுக்குக் கூடாரங்கள் விநியோகித்தல் ஆகியவை முழு வீச்சில் நடந்தன.

காசா நகராட்சி நீர் குழாய்களை சரிசெய்யவும், தெருக்களில் இருந்து இடிபாடுகளை அகற்றவும் தொடங்கியது. ஆனால் அதை முழு வீச்சில் செய்ய கனரக உபகரணங்கள் இல்லை. நகராட்சியின் 40 புல்டோசர்கள் மற்றும் ஐந்து டம்ப் லாரிகளில் சில மட்டுமே இன்னும் வேலை செய்கின்றன என்று செய்தித் தொடர்பாளர் அசெம் அல்னாபிஹ் கூறுகிறார்.

காசா 50 மில்லியன் டன்களுக்கும் அதிகமான கட்டட இடிபாடுகளால் நிரம்பியுள்ளது. 100 லாரிகள் 15 ஆண்டுகள் முழு திறனில் இயங்கினால் மட்டுமே அதை அகற்ற சாத்தியப்படும் என்று ஐ.நா. மதிப்பிடுகிறது.

அழிக்கப்படும் அடையாளம்

காசா குடும்பங்கள் ஒவ்வொரு நாளாக வாழ்க்கையை கடந்த முயற்சிக்கின்றன. 25 வயதான பல் மருத்துவர் அஸ்மா த்வைமாவும் அவரது குடும்பத்தினரும் காசா நகரத்திற்குத் திரும்பிய மற்றொரு குடும்பம். டெல் அல்-ஹவா பகுதியில் உள்ள அவர்களின் வீடு அழிக்கப்பட்டது .

திரும்பி வந்த சில வாரங்களுக்குப் பிறகு, இப்போது தட்டையான மற்றும் எரிந்த இடிபாடுகளின் குவியல் போல இருக்கும் அவர்களின் நான்கு மாடி வீட்டைப் பார்த்து அவர் பெருமூச்செறிகிறார்.

இஸ்ரேல் மக்களை மட்டும் கொள்ளவில்லை. வீடு, நகரம் என்ற அவர்களுக்கு நெருக்கமானவற்றை அளிப்பதன் மூலம் அந்நகருடனான அவர்களது அடையாளத்தை அளிக்கின்றனர் என்று அவர் கூறுகிறார்.

"நான் பயந்ததால் இங்கு வர முடியவில்லை. என் மனதில் என் வீட்டில் அழகு மற்றும் அரவணைப்பு இருந்தது. ஆனால் இப்போது அது இல்லை என்ற இந்த உண்மையை எதிர்கொள்ள நான் பயந்தேன். அவர்கள் கட்டடங்களை மட்டும் அழிப்பதில்லை, அவர்கள் எங்களையும் எங்கள் அடையாளத்தையும் அழிக்கிறார்கள்" என்று அவர் கூறுகிறார். 

 

Tags:    

Similar News