உலகம்

விமானத்தில் தண்ணீர், ஏ.சி. கூட இல்லை.. பிரேசில் மக்களை கைவிலங்குடன் நாடு கடத்திய அமெரிக்கா

Published On 2025-01-27 08:57 IST   |   Update On 2025-01-27 08:57:00 IST
  • உலக அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது.
  • மனித உரிமைகளை மீறும் செயல்.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்று ஒரு வாரம் காலம் முழுமை பெறும் முன் ஏராளமான அதிரடி நடவடிக்கைகளை அவர் எடுத்துள்ளார். இதில் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை நாடு கடத்தும் அதிபர் டிரம்ப்-இன் நடவடிக்கை உலக அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது.

இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரேசில் நாட்டவர்கள் அவமதிக்கப்பட்டதாக பிரேசில் குற்றம்சாட்டியுள்ளது. நாடு கடத்தப்பட்ட பிரேசில் நாட்டவர்கள் கைவிலங்கிடப்பட்டு இருந்தனர் என்று பிரேசில் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இது அவமதிப்பையும் கடந்து, மனித உரிமைகளை மீறும் செயல் என்று பிரேசில் தெரிவித்து இருக்கிறது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி தங்கி வந்த பிரேசில் நாட்டை சேர்ந்த 88 பேர் விமானத்தில் கைவிலங்கிடப்பட்ட நிலையில் அழைத்து வரப்பட்டனர். மேலும், விமானத்தில் குளிரூட்டி இயக்கப்படவில்லை என்றும், குடிப்பதற்கு தண்ணீர் கூட வழங்கப்படவில்லை என்று நாடு கடத்தப்பட்டவர்களில் சிலர் குற்றம்சாட்டினர்.

மேலும், சிலர் விமானத்தினுள் அதிக வெப்பம் காரணமாக சிலருக்கு மயங்கினர் என்றும், பயணிகள் கழிவறையை பயன்படுத்தவும் அனுமதிக்கப்படவில்லை என்று நாடு கடத்தப்பட்ட பயணிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

பயணிகளை மிக மோசமாக நடத்தியது தொடர்பாக அமெரிக்காவிடம் விளக்கம் கேட்கப்படும் என்று பிரேசில் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News