அடம் பிடித்த கொலம்பியாவை வழிக்கு கொண்டு வந்த டிரம்ப்.. சட்டென நடந்த மாற்றம் - முழு பின்னணி
- கொலம்பியா மீது வரி விதிப்பு, விசா ரத்து, பயணிகள் வர தடை என கெடுபிடி உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
- நானோ, மற்ற கொலம்பியா நாட்டவரோ, நீங்கள் நினைப்பது போல் மட்டமானவர்கள் அல்ல
ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் 47 வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். அதுமுதல் உலக சுகாதர அமைப்பில் இருந்து வெளியேறுவது, உலக நாடுகளுக்கான யுஎன்- எய்ட் நிதியுதவியை நிறுத்துவது உள்ளிட்ட முடிவுகளை அறிவித்தார். குறிப்பாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவரை நாடுகடத்துவதில் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய 18,000 இந்தியர்களைத் திரும்பப்பெறுவதாக இந்தியாவும் உடன்பட்டுள்ளது. ஆனால் கொலம்பியா அமெரிக்காவின் நாடு கடத்தல் திட்டத்தை நிராகரித்தது. இதனால் கோபம் தலைக்கேறிய டிரம்ப், கொலம்பியா மீது வரி விதிப்பு, விசா ரத்து, பயணிகள் வர தடை என கெடுபிடி உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
முன்னதாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்து விமானப்படை விமானங்கள் மூலம் அனுப்பி வைத்தனர்.
ஆனால் அகதிகள் அனுப்பி வைக்கப்பட்ட 2 விமானங்களைத் தரையிறங்க கொலம்பியா அனுமதிக்கவில்லை. இதனால் கொதித்த டிரம்ப், அந்த நாட்டு பொருட்களுக்கு 25 சதவீதம் இறக்குமதி வரியை உயர்த்தி உத்தரவிட்டார்.
மேலும் இந்த வரி விதிப்பு ஒரு வாரத்தில் 50 சதவீதமாக உயர்த்தப்படும், கொலம்பிய நாட்டு அரசு அதிகாரிகள், அவர்களை சார்ந்தோருக்கான விசா ரத்து, கொலம்பியர்கள் அமெரிக்காவுக்கு பயணிக்க தடை உள்ளிட்ட உத்தரவுகளையும் அவசரகதியில் டிரம்ப் பிறப்பித்தார்.
இதற்க்கு பதிலடியாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரியை உயர்த்தி கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ உத்தரவிட்டார். நீங்கள் எங்களுக்கு செய்வதை, நாங்களும் உங்களுக்கு செய்வோம் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் கொலம்பிய அதிகாரிகளின் விசா ரத்து, பயணிக்க தடை உள்ளிட்டவை குறித்து பேசிய குஸ்டாவோ பெட்ரோ, நான் ஒன்றும் அமெரிக்கா வர விரும்பவில்லை. அது எனக்கு போர் அடிக்கிறது. நானோ, மற்ற கொலம்பியா நாட்டவரோ, நீங்கள் நினைப்பது போல் மட்டமானவர்கள் அல்ல என்று தெரிவித்தார்.
இந்நிலையில் கொலம்பியா தனது நிலைப்பாட்டில் இருந்து திடீரென யு டர்ன் அடித்து, அமெரிக்காவில் இருந்து அனுப்பட்ட தங்கள் நாட்டு அகதிகளை ஏற்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொலம்பியா அரசு, ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவின் வழிகாட்டுதலின் கீழ், நாடு கடத்தும் விமானங்களில் நாட்டிற்கு வரவிருக்கும் சக நாட்டவர்கள் பாதுகாப்பாக திரும்புவதையும், கண்ணியமாக நடத்தப்படுவதையும் உறுதி செய்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
எந்த சூழ்நிலையிலும் திரும்ப வந்தவர் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. இதன்மூலம் தென் அமெரிக்க நாடான கொலம்பியா தன்னிடம் அடிபணிந்ததை அடுத்து அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட 25 சதவீத வரி உயர்வு, விசா ரத்து, பயண தடை ஆகியவற்றை அமெரிக்கா திரும்பப்பெற்றுள்ளது.
பிரேசில் நாடும் தங்கள் அகதிகளை திரும்பப்பெற்றுள்ள நிலையில், தங்கள் நாட்டவரை விமானத்தில் தண்ணீர் கொடுக்கால், ஏசி இல்லாமல், கைவிலங்கிட்டு அமெரிக்கா கீழ்த்தரமாக நடத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.