குடியரசு தினம்: ஜனாதிபதி, பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த அதிபர் புதின்
- குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்தார்.
- சர்வதேச விவகாரங்களில் இந்தியா-ரஷியா இடையே ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலை தொடரும் என்றார்.
மாஸ்கோ:
இந்தியாவின் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அதிபர் புதின் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:
75 ஆண்டுக்கு முன் நடைமுறைக்கு வந்த அரசமைப்பு சட்டம், திறன்வாய்ந்த அரசு அமைப்புகளை கட்டமைக்கவும், இந்தியாவின் சுதந்திர, ஜனநாயக வளர்ச்சிக்கும் அடித்தளமிட்டது.
அப்போது முதல் பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் சர்வதேச அளவில் இந்தியா வெற்றிகளைக் குவித்துள்ளது.
சர்வதேச ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் முக்கிய பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் இந்தியா கணிசமான பங்களிப்பை வழங்குகிறது.
இந்தியா உடனான எங்கள் உறவுகளை மிகவும் மதிக்கிறோம். அனைத்துத் துறைகளிலும் ஆக்கப்பூர்வமான இருதரப்பு ஒத்துழைப்பை தொடர்ந்து கட்டமைக்கவும், சர்வதேச விவகாரங்களில் இந்தியா-ரஷியா இடையே ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலை தொடரவும் இருநாடுகளின் கூட்டு நடவடிக்கைகள் நீடிக்கும் என தெரிவித்தார்.