உலகம்

ரஷியாவில் ஓட்டலில் பயங்கர தீ விபத்து- 13 பேர் பலி

Published On 2022-11-05 20:38 IST   |   Update On 2022-11-05 20:38:00 IST
  • சுமார் 250 பேரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
  • தீ விபத்து ஏற்படுவதற்கு சற்று முன்பு ஓட்டலில் சண்டை மூண்டதாக தகவல்

மாஸ்கோ:

ரஷியாவின் மாஸ்கோ அருகில் உள்ள கோஸ்ட்ரோமாவில் உள்ள பிரபல ஓட்டலில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால் வாடிக்கையாளர்களும், ஊழியர்களும் அவசரம் அவசரமாக வெளியேறினர். எனினும் கரும்புகை சூழ்ந்ததால் பலர் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். ஓட்டலின் மேற்கூரையும் இடிந்து விழுந்தது.

தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 250 பேரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர். எனினும் தீயில் சிக்கியும் இடிபாடுகளில் சிக்கியும் 13 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.

யாரோ ஒரு நபர் ஃபிளேர் துப்பாக்கியைப் பயன்படுத்தியபிறகே தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்படுவதற்கு சற்று முன்பு ஓட்டலில் சண்டை மூண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதற்கும் ஃபிளேர் துப்பாக்கிக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது உடனடியாகத் தெரியவில்லை.

தீவிபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின்பேரில் ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். உணவக இயக்குனரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News