மூலோபாய கூட்டாண்மை, உலகளாவிய விவகாரம், பயங்கரவாதம் குறித்து விவாதித்த பிரதமர் மோடி- மேக்ரான்
- இந்தோ-பசிபிக், ரஷியா- உக்ரைன் போர் உள்ளிட்ட பல சிக்கலான விசயங்கள் குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர்.
- பாதுகாப்பு, அணு எரிசக்தி, விண்வெளித்துறையில் இருநாட்டின் மூலோபாய கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர்.
இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா செல்வதற்கு முன்னதாக, பிரான்ஸ் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பிரான்ஸ் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து அமெரிக்கா செல்கிறார்.
பிரான்சில் நேற்று நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மார்செய்ல்ஸில் அமைக்கப்பட்டுள்ள இந்திய துணை தூதரகத்தை பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் இணைந்து திறந்து வைத்தனர். பின்னர் மஸார்குஸில் உள்ள இந்திய ராணுவ வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடியும், இமானுவேல் மேக்ரானும் மரியாதை செலுத்தினர்.
அதன்பிறகு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உடன் இந்திய பிரதமர் மோடி இருநாடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது மூலோபாய கூட்டாண்மை, உலகளாவிய விவகாரம் மற்றும் பயங்கரவாதம் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர். இருதரப்பு ஒத்துழைப்பு வளர்ச்சி குறித்து இரு தலைவர்களும பாராட்டு தெரிவித்தனர். மேலும் இருதரப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்த உறுதி பூண்டனர்.
பிரதமர் மோடி- பிரான்ஸ் அதிபர் மேக்ரான் சந்திப்புக்குப் பின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் "இந்தோ-பசிபிக், ரஷியா- உக்ரைன் போர் உள்ளிட்ட பல சிக்கலான விசயங்கள் குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர்.
பாதுகாப்பு, அணு எரிசக்தி, விண்வெளித்துறை ஆகியவற்றில் இருநாட்டின் மூலோபாய கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர். தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு துறையில் இணைந்து செயல்படுவது குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
இந்த பேச்சுவார்த்தை இந்தியா- பிரான்ஸ் மூலோபாய கூட்டாண்மையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்தவும் தலைவர்கள் அழைப்பு விடுத்தனர். மேலும் இது தொடர்பாக 14-வது இந்தியா- பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தின் அறிக்கையை வரவேற்றனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.