வெடிகுண்டு மிரட்டலால் ஜப்பான் விமானம் அவசரமாக தரையிறக்கம்- பயணிகள் பீதி
- விமானத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்ட பிறகு வெடிகுண்டு நிபுணர்கள் விமானம் முழுவதும் சோதனையிட்டனர். ஆனால் வெடிகுண்டுகள் ஏதுவும் கிடைக்கவில்லை.
- வெடிகுண்டு மிரட்டல், வதந்தி என்பது தெரிய வந்ததால் அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர்.
டோக்கியோ:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து கியூஷி தீவில் உள்ள புகுவோவாவுக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் 136 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் இருந்தனர்.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது அதில் வெடிகுண்டு இருப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்தது. ஜெர்மனியில் இருந்து போனில் ஆங்கிலத்தில் பேசிய நபர், விமானத்தில் வெடிகுண்டு வைத்ததாக தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானிக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து விமானம் அய்ச்சி மாகாணத்தில் உள்ள சுபு விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது. அங்கு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அவசர வழிகளில் வெளியேற்றப்பட்டனர்.
பயணிகள் பீதியில் அவசர அவசரமாக விமானத்தில் இருந்து வெளியேறினர். இதில் 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விமானத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்ட பிறகு வெடிகுண்டு நிபுணர்கள் விமானம் முழுவதும் சோதனையிட்டனர். ஆனால் வெடிகுண்டுகள் ஏதுவும் கிடைக்கவில்லை.
வெடிகுண்டு மிரட்டல், வதந்தி என்பது தெரிய வந்ததால் அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.