'மூன்றாம் உலகப் போர் நிச்சயம் மூளும்!.. ஆனால் பைடன்..' டொனல்டு டிரம்ப் எச்சரிக்கை
- உலகம் மூன்றாம் உலகப்போரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றும் அது தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- காம்ரேட் கமலா ஹாரிஸ் தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் சகாக்களுடன் பஸ்சில் டூர் சென்று கொண்டிருக்கிறார்'
ரஷியா- உக்ரைன் போர், இஸ்ரேல்- பாலஸ்தீன போர் என்பது அந்தந்த நாடுகளுக்கிடையேயான போர் மட்டுமல்ல. உலக நாடுகள்,போரிடும் இரண்டு நாடுகளில் யாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டின் மூலம் இரண்டு அணிகளாக பிரிந்து நிற்கிறது. இஸ்ரேல் மற்றும் உக்ரைனுக்கு மேற்குலகம் ஆதரவு அளித்து வருவதுபோல், பாலஸ்தீனத்துக்கு மத்திய கிழக்கு நாடுகளும், ரஷியாவுக்கு சீனா வட கொரியா ஆகியவை ஆதரவாக நிற்கின்றன.
இந்நிலையில் இந்த போர்கள் மூன்றாம் போர் மூள்வதற்கான முன்னறிவிப்புகளாகவே உள்ளன என்று பலரும் பயத்தில் உள்ளனர். அதை உறுதிப்படுத்தும் வகையில் உலகப் பொருளாதாரத்திலும் ராணுவ பலத்திலும் மிகப்பெரிய சக்தியாக விளங்கும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தற்போது கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். அதாவது, உலகம் மூன்றாம் உலகப்போரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றும் அது தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நடந்த லெபனான்-இஸ்ரேல் இடையேயான வான் வெளி தாக்குதல்கள், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம், பிரச்சனைகளைச் சரி செய்வதற்காக அமரிக்க வான் படைத் தளபதி CQ பிரவுனின் திடீர் மத்திய கிழக்கு பயணம் ஆகியவற்றை முன்வைத்து,
'உலகம் மூன்றாம் உலகப் போரை நோக்கிசென்று கொண்டிருக்கிறது ஆனால் தூங்குமூஞ்சி [sleepy] ஜோ [பைடன்] கலிபோர்னியா பீச்சில் தூங்கிக்கொண்டு இருக்கிறார். ஜனநாயகவாதிகளால் [கட்சியால்]ஜோ புறக்கணிக்கப்பட்டுவிட்டார். காம்ரேட் [கம்யூனிஸ்ட்] கமலா ஹாரிஸ் தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் சகாக்களுடன் பஸ்சில் டூர் சென்று கொண்டிருக்கிறார்' என்று தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.