உலகம் (World)

காசாவில் கட்டட இடிபாடுகளில் ஆயிரக்கணக்கான உடல்கள்: கைகளால் தோண்டி எடுக்கும் அவலம்

Published On 2023-11-17 06:14 GMT   |   Update On 2023-11-17 06:14 GMT
  • இஸ்ரேல் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் கட்டடங்கள் தரைமட்டம் ஆகியுள்ளன.
  • எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஜே.சி.பி. போன்ற வாகனங்கள் செயல்படாத நிலை.

ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி, யாரும் எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என 1,400 பேர் கொல்லப்பட்டனர். அதோடு 200-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

இதனால் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வகையில் காசா மீது இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. அன்றைய தினத்தில் இருந்து தற்போது வரை காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. போர் தொடங்கிய நேரத்தில் ஏவுகணைகள் மூலம் காசாவை தாக்கியது. இடைவிடாத வான்தாக்குதலுக்கு உள்ளான காசா உருக்குலைந்துள்ளது.

எங்கு பார்த்தாலும் கட்டட இடிபாடுகளாக காட்சியளிக்கின்றன. தற்போது இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே இரண்டு முறை மட்டுமே மனிதாபிமான உதவிகள் காசா சென்றடைய இஸ்ரேல் அனுமதி அளித்தது.

இதனால் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அனைத்து பணிகளும் தொய்வடைந்துள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை உறிவினர்கள் மீட்க முடியாமல் திணறி வருகிறார்கள். ஜே.சி.பி. போன்ற கனரக வாகனங்கள் எரிபொருள் இல்லாமல் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலானோர் இரும்பு கம்பிகளை கொண்டு இடிபாடுகளை நீக்கி வருகிறார்கள். பலர் எந்தவித உதவிப் பொருட்களும் இல்லாததால், கைகளால் இடிபாடுகளை அப்புறப்படுத்தி உடல்களை வெளியே எடுக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்து சில தினங்கள் ஆகியுள்ள இடங்களில் துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது. இதையெல்லாம் சகித்துக் கொண்டு எப்படியாவது உறவினர்களின் உடல்களை மீட்க வேண்டும் என பொதுமக்கள் பரிதவித்து வருவது வேதனைக்குரியதாக உள்ளது.

Tags:    

Similar News