உலகம்

வர்த்தக போரை தொடங்கிய டிரம்ப்.. அடுத்த குறி ஐரோப்பிய யூனியன் - கொதிக்கும் உலக நாடுகள்

Published On 2025-02-03 11:46 IST   |   Update On 2025-02-03 11:46:00 IST
  • சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதி விதித்து உத்தரவிட்டார்.
  • கனடா, சீனா, மெக்சிகோ மீதான அமெரிக்கவின் வரிவிதிப்பு வருத்தமளிக்கிறது.

அமெரிக்காவுக்குள் வரும் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் போதைப்பொருட்களை காரணம் காட்டி கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டார்.

இதேபோல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதி விதித்து உத்தரவிட்டார். நெருக்கடிகள் தணியும் வரை இந்த வரி விதிப்புகள் தொடரும் என்று வெள்ளை மாளிகை அறிவித்தது. இதைத்தொடர்ந்து அமெரிக்க பொருட்களுக்கு கனடாவும் 25 சதவீதம் வரி விதித்தது. மெக்சிகோவும் சீனாவும் கடும் கண்டனம் தெரிவித்தன.

இதற்கிடையே 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியன் மீதும் வரிவிதிப்போம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், "ஐரோப்பிய யூனியன் மீது புதிய வரிகளை விதிப்பேன். அவர்கள் நம்மை பயன்படுத்தி கொள்கிறார்கள். எனவே வரிவிதிப்பு எப்போது என்ற சொல்ல மாட்டேன். ஆனால், விரைவில் நடக்கும்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில் டிரம்ப் தங்கள் மீது வரிவிதித்தால் கடுமையான பதிலடி கொடுப்போம் என ஐரோப்பிய யூனியன் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய ஐரோப்பிய யூனியன் செய்தி தொடர்பாளர், கனடா, சீனா, மெக்சிகோ மீதான அமெரிக்கவின் வரிவிதிப்பு வருத்தமளிக்கிறது.

தேவையற்ற வரிகள் பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தி பணவீக்கத்துக்கு வழிவகுக்கும். இது அனைத்து தரப்பையும் பாதிக்கும். ஐரோப்பிய யூனியன் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று தெரித்துள்ளார்.

உலகமயமாக்கல் காரணமாக அனைவரும் பயனடையும் சூழலில் டிரம்ப் வரிவிதிப்பு மூலம் உலகை துண்டாட முயற்சிக்கிறார் என்று ஜெர்மன் அதிபர் ஷோல்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு ஜப்பானும் அச்சம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே இந்தியா சீனா, ரஷியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பு டாலருக்கு பதிலாக புதிய கரன்சியை உருவாக்கினால் 100 சதவீத வரி விதிக்கப்படும் என எச்சரித்தார். இதனால் சர்வதேச அளவில் டிரம்பின் நடவடிக்கைகளால் வர்த்தக போர் மூண்டுள்ளது.

Tags:    

Similar News