அமெரிக்க எல்லையில் எமர்ஜன்சி கொண்டு வரப்போகும் டிரம்ப்?
- முக்கிய உத்தரவுகளை பிறப்பிக்க டொனால்டு டிரம்ப் முடிவு.
- அவசர நிலையை கொண்டுவரவும் தயங்க மாட்டேன்.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகைக்குள் அடியெடுத்து வைத்ததும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி முதற்கட்டமாக 100 முக்கிய உத்தரவுகளை பிறப்பிக்க டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி நாடு முழுக்க சட்டவிரோதமாக தங்கியுள்ள அகதிகளை வெளியேற்ற டிரம்ப் உத்தரவிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதற்கான கையெழுத்தை டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே போட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. முன்னதாக, சட்டவிரோத குடியேற்ற விவகாரத்தில் தேவைப்பட்டால் தேசிய அவசர நிலையை கொண்டுவரவும் தயங்க மாட்டேன் என்று டிரம்ப் கூறியிருந்தார்.
அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கவும், எல்லை சுவரை கட்டுவதற்கும் கூடுதல் படைகளை அப்பகுதியில் குவிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்கும், ஏற்கனவே சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தவும் கடும் நடவடிக்கை எடுப்பதாக கூறியே டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். எல்லைப் பகுதியில் பாதுகாப்பை அதிகப்படுத்தவும், நாடு கடத்தலை அதிகப்படுத்துவது தொடர்பாக டிரம்ப் பத்து நிர்வாக உத்தரவுகளை பிறப்பிக்க இருக்கிறார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சட்டப்பூர்வ குடியிரிமை இல்லாத பெற்றோருக்கு அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளின் குடியுரிமையை முடிவுக்கு கொண்டுவரும் உத்தரவை பிறப்பித்து சட்டப்பூர்வ குடியேற்றத்தை நிறுத்த டிரம்ப் முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அகதிகள் திட்டத்தை குறைந்தபட்சம் நான்கு மாதங்களுக்கு இடைநிறுத்தம் செய்யவும் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.