சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து ராணுவ விமானம் மூலம் வெளியேற்றிய அமெரிக்கா
- 538 பேரை கைது செய்துள்ளது டொனால்டு டிரம்ப் நிர்வாகம்.
- 100-க்கும் அதிகமானோரை ராணுவ விமானம் மூலம் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப், அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
டொனால்டு டிரம்ப் கடந்த திங்கட்கிழமை (20-ந்தேதி) அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். அதில் இருந்து அதிகாரிகள் சட்ட விரோதமாக குடியேறியவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கரோலின் லீவிட் கூறுகையில் "அமெரிக்க அதிகாரிகள் சட்டவிரோதமாக குடியேறிய குற்றவாளிகள் 538 பேரை கைது செய்துள்ளனர்.
பயங்கரவாதிகள் என சந்தேகப்படும் உள்ளிட்ட 538 சட்டவிரோதமாக குடிபெயர்ந்த குற்றவாளிகளை டிரம்ப் நிர்வாகம் கைது செய்துள்ளது. டிரென் டி அராகுவா குரூப்பை சேர்ந்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் சிறார்களுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுக்காக தண்டிக்கப்பட்டுள்ளனர்.
ராணுவ விமானம் மூலம் சட்ட விரோதமாக குடிபெயர்ந்த குற்றவாளிகளை வெளியேற்றியுள்ளது. வரலாற்றில் மிகப்பெரிய நாடுகடத்தல் நடவடிக்கை சிறப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன" எனத் தெரிவித்தார்.