புதுச்சேரி

புதுவை பூமியான்பேட்டையில் ஆசிரியர் தம்பதியர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை

Published On 2022-09-18 10:56 IST   |   Update On 2022-09-18 10:56:00 IST
  • பூமியான்பேட்டையில் ஆசிரியர் தம்பதியர் வீட்டில் 40 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
  • ஜெனிஷா ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி:

புதுவை பூமியான்பேட்டை அன்னை அப்பார்ட்மெண்ட் எதிரே வாடகை வீட்டில் வசித்து வருபவர் மனோராஜ் (வயது40). இவரது மனைவி ஜெனிஷா(38). கணவன்-மனைவி இருவரும் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். ஜெனிஷா தன்னுடைய நகைகளை பாதுகாப்பாக வீட்டின் படுக்கை அறையில் கட்டிலுக்கு கீழே ஒரு பாலித்தீன் பையில் வைத்து செல்வது வழக்கம். விசேஷத்துக்கு மட்டும் அந்த நகைகளை அணிந்து செல்வார்.

இதற்கிடையே வீட்டின் உரிமையாளர் குளியல் அறை மற்றும் கழிவறையை பழுது பார்த்து பெயிண்ட் அடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் அதற்கு ஜெனிஷா சம்மதம் தெரிவித்தார்.

கடந்த 1½ மாதங்களாக வீட்டின் கட்டுமான வேலைகள் நடந்து வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று ஜெனிஷா கட்டிலின் கீழே வைத்திருந்த நகைகளை சரிபார்த்தார். அப்போது 40 பவுன் நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். யாரோ அந்த நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் யாரோ அந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.

இதுகுறித்து ஜெனிஷா ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News