புதுச்சேரி

பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.1,000 அபராதம்- எச்சரிக்கையை மீறுவோர் மீது வழக்கு

Published On 2024-05-23 09:31 IST   |   Update On 2024-05-23 09:31:00 IST
  • பொதுமக்கள் தங்களுடைய கட்டிட கழிவுகள், பழைய கட்டுமானப் பொருட்கள் எதையும் சாலைகளில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.
  • அனைத்து முக்கிய வீதிகளிலும் உள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணித்து தவறு செய்பவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுச்சேரி:

புதுச்சேரி உள்ளாட்சித்துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் குப்பை கொட்டுவதால் ஏற்படும் சிரமங்களை போக்கவும், அழகை பராமரிக்கவும் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகள், உள்ளாட்சித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு பகுதியில் புதிய கட்டிடம் கட்டுபவர்கள் பழைய கட்டிட கழிவுகளை பொறுப்பற்ற முறையில் சாலையோரங்களில் தேக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய செயல்களால் சாலையில் நடப்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாவதுடன் விபத்துகளும் நடக்கின்றன.

எனவே பொதுமக்கள் தங்களுடைய கட்டிட கழிவுகள், பழைய கட்டுமானப் பொருட்கள் எதையும் சாலைகளில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் சாலையோரங்களில் உணவுக் கடைகள் வைத்திருப்போர் உணவுக் கழிவுகளை அருகில் உள்ள குப்பை தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும் அல்லது குப்பை அகற்றும் ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதுமற்ற வணிக நிறுவனங்களுக்கும் பொருந்தும். பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்காத வண்ணம் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். தவறுவோர் மீது நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து விதிகளின்படி அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும்.


இதுதவிர பொது இடங்களில் குப்பை கொட்டும் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரை அபராதமும், கட்டுமான பொருட்களையோ கழிவுகளையோ வீடு மற்றும் வணிக நிறுவனங்கள் முன் அல்லது பொதுவெளியில் கொட்டுபவர்களுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து முக்கிய வீதிகளிலும் உள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணித்து தவறு செய்பவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அபராதம் விதித்தும் எச்சரிக்கையை மதிக்காமல் செயல்படுவோர் மீது பிரிவு எண்.133 குற்றவியல் சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News