புதுச்சேரி

பா.ஜனதா வேட்பாளராக புதுச்சேரி தொகுதியில் அமைச்சர் நமச்சிவாயம் களமிறங்குகிறார்?

Published On 2024-03-19 09:33 GMT   |   Update On 2024-03-19 09:33 GMT
  • நமச்சிவாயத்தை தேர்தலில் போட்டியிட தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
  • பட்டியலில் அமைச்சர் நமச்சிவாயத்தின் பெயர் முதலிடத்தில் இருந்தது.

புதுச்சேரி:

புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் யார்? என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

எல்லோரும் ஒருமித்த குரலில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை தேர்தலில் போட்டியிட தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர் தொடர்ந்து மறுத்து வந்தார்.

மாநில அரசியல்தான் முக்கியம் என கருதுவதால் இதனை தவிர்த்து வந்தார்.

இதனால் காரைக்கால் தொழிலதிபர் ஜி.என்.எஸ். ராஜசேகரனை களமிறக்கலாம் என பா.ஜனதாவின் முக்கிய நிர்வாகிகள் கட்சி தலைமையிடம் முன்மொழிந்தனர்.

இதற்கிடையே புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட 4 பேரின் பெயர்களை டெல்லி கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த பட்டியலில் அமைச்சர் நமச்சிவாயத்தின் பெயர் முதலிடத்தில் இருந்தது. இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பா.ஜனதாவின் புதுவை மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா அவசர அழைப்பின் பெயரில் அமைச்சர் நமச்சிவாயம் பெங்களூர் சென்று அவரை சந்தித்து பேசினார்.

அப்போது அவரிடம் நிர்மல்குமார்சுரானா பா.ஜனதா வெற்றி வாய்ப்புக்காக தாங்களே போட்டியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

அதே கருத்தையே முதலமைச்சர் ரங்கசாமியும் பா.ஜனதா கட்சி தலைமைக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதே வேளையில் கவர்னர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை தீவிர அரசியலில் ஈடுபட போவதாகவும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் தெரிவித்தார்.

மேலும் புதுச்சேரியில் போட்டியிடவில்லை என்றும் தமிழகத்தில் போட்டியிட போவதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து பெங்களூரில் இருந்து புதுவை திரும்பிய அமைச்சர் நமச்சிவாயம் நேற்று மதியம் சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

அப்போதும் முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற அமைச்சர் நமச்சிவாயத்தை போட்டியிட அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அமைச்சர் நமச்சிவாயத்திடம் நிருபர்கள் கேட்டபோது என்.ஆர். காங்கிரஸ் தலைவர் முதலமைச்சர் ரங்கசாமி ஆசியோடு புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் யார் போட்டியிட்டாலும் அவரை வெற்றி பெற செய்வோம் அதே வேளையில் கட்சி தலைமை உத்தரவிட்டால் புதுச்சேரி தொகுதியில் போட்டியிட தயாராக இருப்பதாக அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

எனவே புதுச்சேரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுவது உறுதியாகி விட்டதாக தெரிகிறது.

Tags:    

Similar News