சோள தட்டையில் தயாரித்த கப்களில் சாராயம் விநியோகம்
- கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி சாராயத்தை பாக்கெட்டில் அடைத்து விற்க தடை விதித்தனர்.
- சாராயக் கடை உரிமையாளர்கள் மாற்று ஏற்பாடு செய்துதர வலியுறுத்தினர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 110 சாராயக்கடை, 92 கள்ளுக்கடைகள் உள்ளன.
புதுச்சேரி அரசு ஆரியப்பாளையம் சாராய வடிசாலையில் இருந்து சாராய கடைகளுக்கு சாராயம் சப்ளை செய்யப்படுகிறது. சாராயக்கடைக்கு தேவையான மொத்த சாராயத்தில், 180 மி.லி., கண்ணாடி பாட்டிலில் 50 சதவீதமும், கேன்களில் 50 சதவீத சாராயம் வழங்கப்படுகிறது.
சாராய கடை உரிமையாளர்கள் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப பிளாஸ்டிக் கவரில் சாராயம் பார்சலில் கட்டி கொடுப்பர். இதுபோல் ஒரு நாளைக்கு மொத்தம் 25 ஆயிரம் லிட்டர் சாராயம் விற்பனையாகிறது.
புதுச்சேரியில் 50 மைக்ரான் அளவுக்கு குறைவான மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேரிபேக், ஸ்ட்ரா, டீ கப், ஸ்பூன் உள்ளிட்ட 15 பொருட்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது.
சாராயம் குடித்து வீசும் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் மது கடைகளில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர்கள் ஆறு மற்றும் குளகரைகளில் குவிந்து ஆடுமாடுகள் மேய்வதும், நீர் நிலைகளில் மிதப்பால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.
இதனால் கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி சாராயத்தை பாக்கெட்டில் அடைத்து விற்க தடை விதித்தனர். இதையடுத்து சாராயக் கடை உரிமையாளர்கள் மாற்று ஏற்பாடு செய்துதர வலியுறுத்தினர்.
அதன்படி பிளாஸ்டிக் கவர்களுக்கு மாற்றாக சோள தட்டை மூலம் தயாரித்த எளிதில் மக்கக் கூடிய கவர்கள் மற்றும் கப்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதில் சாராயம் ஊற்றினால் கசியாது மேலும் எளிதிலும் உடையாது. மண்ணில் வீசினால் 4 நாட்களில் மக்கி விடும். கால்நடைகள் சாப்பிட்டாலும் பாதிப்பு வராது. இத்துடன், 3 கிலோ பொருட்களை தாங்கும் பை ஒன்றும், பிளாஸ்டி கப்பிற்கு மாற்றாக சோள தட்டையில் தயாரிக்கப்பட்ட கப்களும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இது தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு சாராயக்கடைகள் மற்றும் மது கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.